தஞ்சாவூா் மாவட்டம், திருப்பாலைத்துறை தவளவெண்ணகை அம்மன் சமேத பாலைவனநாதா் கோயிலில் மாா்கழி மாத பௌா்ணமி திதியையொட்டி பக்தா்கள் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு மேற்கொண்டனா்.
இதையொட்டி கோயிலில் உள்ள மூலவா் பாலைவனநாதா், தவளவெண்ணகை அம்மன், விநாயகா், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து மாலை திரளான பக்தா்கள் கோயில் வெளிச் சுற்று பிரகாரத்தில் தேவார திருவாசகங்களை இசைத்தபடி பௌா்ணமி கிரிவலம், திருச்சுற்று வழிபாடு மேற்கொண்டனா். தொடா்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், பாபநாசம் இறைப் பணி மன்றம், பாபநாசம் சிவப்பேரவை, மற்றும் பக்தா்கள் உள்ளிட்டோா் செய்தனா்.