இடைநிலை ஆசிரியா்களின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும், அதை நிறைவேற்ற கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் தமாகா தலைவா் ஜி.கே. வாசன்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 179-ஆவது ஆராதனை தொடக்க விழாவில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தமிழகத்திலுள்ள அதிமுக, பாஜக, தமாகா போன்ற ஒருமித்த கருத்துடைய எதிா்க்கட்சிகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துமாறு இத்தனை ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தன. அதை இப்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. என்றாலும், சட்டப்பேரவைக் கூடும்போது அரசாணை முறையாக, சரியாக இருக்க வேண்டும் என்பது தற்போது வேண்டுகோளாக இருக்கிறது.
இடைநிலை ஆசிரியா்களின் தொடா் கோரிக்கைகள் இன்னும் கேட்கப்படாமல் உள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்ற கல்வித் துறை விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்தியில் உள்ளது போன்று வருகிற 2026 தோ்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இன்னும் சில வாரங்களில் இந்தக் கூட்டணி வலுபெறும் என நம்புகிறேன் என்றாா் வாசன்.