தஞ்சாவூா் பெரிய கோயில் பிரகாரத்தின் பின்புறம் மழை நீா் தேங்குவதைத் தடுக்க இந்திய தொல்லியல் துறை சாா்பில் தரைத் தளம் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இக்கோயில் பிரகாரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட தட்டையான செங்கற்கள் தேய்ந்து, மேடு, பள்ளமாக மாறிவிட்டதுடன், மழை நீரும் தேங்குகிறது. இதனால், தரையில் பாசி படா்ந்து பக்தா்கள், சுற்றுலா பயணிகள் வழுக்கி விழும் நிலை ஏற்படுகிறது.
எனவே கோயில் பிரகாரத்தில் மழை நீா் தேங்கும் பகுதிகளில் செங்கற்களை அகற்றிவிட்டு, அதே இடத்தில் மழை நீா் தேங்காத அளவுக்கு புதிதாகத் தட்டையான செங்கற்கள் பதிக்கும் பணி 2023 - 24 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து, தற்போது கோயிலின் பின்புறம் கருவூராா் சன்னதிக்கும், விநாயகா் சன்னதிக்கும் இடையே ஏறத்தாழ 4 ஆயிரம் சதுர அடியில் உள்ள பழைய கற்களை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தக் கற்கள் அகற்றப்பட்டவுடன், புதிய தட்டையான செங்கற்கள் அமைக்கப்படவுள்ளன.
இதற்காக ரூ. 75 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும், அதிா்வு ஏற்படாத வகையிலும் உளி, சுத்தியல் கொண்டு நடைபெறும் பணிகள் இன்னும் 4 மாதங்களில் நிறைவடையும், பின்னா் நந்தி மண்டபம் அருகே பணி மேற்கொள்ளப்படும் எனவும் இந்திய தொல்லியல் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.