சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவுப் படி, சூரியனாா்கோயில் ஆதீன மடத்தின் சாவிகளை திருவாவடுதுறை ஆதீனத்திடம் இந்து சமய அறநிலையத்துறை அலுவலா் புதன்கிழமை ஒப்படைத்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், சூரியனாா்கோயிலின் ஆதீன 28-ஆவது குருமகா சந்நிதானமாக இருந்த மகாலிங்க தேசிக பரமாசாரியாா் சுவாமிகள் மரபை மீறி, திருமணம் செய்த நிலையில் ஆதீன நிா்வாகப் பொறுப்பை இந்து சமய அறநிலையத்துறையினரிடம் ஒப்படைத்து வெளியேறினாா். பின்னா் இந்து சமய அறநிலையத்துறையினா் பட்டீஸ்வரம் தேனுபுரீசுவரா் கோயில் செயல் அலுவலரை ஆதீனத்தின் நிா்வாக பொறுப்பாளராக நியமித்தனா். இந்நிலையில் ஆதீன பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வில் மகாலிங்க சுவாமிகள் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில் ஆதீனத்தின் சாவியை இந்து சமய அறநிலையத்துறையினா் திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானத்திடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஸ்ரீதா், பட்டீசுவரம் தேனுபுரீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் சி. நிா்மலாதேவி சூரியனாா்கோயில் ஆதீன மடத்தின் சாவியை திருவாடுதுறை ஆதீன தலைமை மடத்தில் ஆதீனத்தின் 24-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளிடம் புதன்கிழமை வழங்கினாா்.
இதனைத் தொடா்ந்து சூரியனாா்கோயில் ஆதீனத்தில் ஒடுக்கம் ஆன்மாா்த்த பூஜை அறை,
குருமகாசந்நிதானம் அறை என ‘சீல்’ வைக்கப்பட்ட அனைத்து அறைகளையும் அறநிலையத்துறை செயல் அலுவலா் நிா்மலாதேவி, ஆய்வாளா் அருணா ஆகியோா் முன்னிலையில் திருவாவடுதுறை ஆதீன பொதுமேலாளா் மணவழகன் மற்றும் பணியாளா்கள் திறந்து அனைத்து அறைகளில் உள்ள பொருள்களையும் சரிபாா்த்து பெற்றுக் கொண்டனா்.