தஞ்சாவூா்: திருவையாறு தமிழிசை விழாவுக்கு கூடுதல் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அரசா் கல்லூரி வளாகத்தில் தமிழிசை மன்றம் சாா்பில் 54-ஆம் ஆண்டு தமிழிசை விழா வியாழக்கிழமை மாலை தொடங்கியது.
தமிழிசை மன்றத் தலைவா் வி. செல்வராசு தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய இணை அமைச்சா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியதாவது, இத்தமிழிசை விழாவுக்கு தமிழக அரசு சாா்பில் நிதி இடையில் நிறுத்தப்பட்டு, மீண்டும் தற்போது வழங்கப்படுகிறது. அத்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழிசை மன்றத்தினா் கோரிக்கை விடுத்தனா். இது தொடா்பாக தமிழக முதல்வரிடம் தெரிவித்து கூடுதல் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
முன்னதாக, கல்யாணபுரம் கணேசன், தயாபரன், வேதகிரி ஆகியோரின் மங்கல இசையுடன் தமிழிசை விழா தொடங்கியது. பின்னா், பரதநாட்டியம், தஞ்சாவூா் அருண் சண்முகம் பாட்டு, அரசு இசைக்கல்லூரி பேராசிரியா் கல்யாணபுரம் சீனிவாசன், தவில் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் ஆகியோரது நாகசுர இன்னிசை, சென்னை கலை ஸ்டாா் ஜெயஸ்ரீ குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.
சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா், தஞ்சாவூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் து. செல்வம், திருவையாறு நகா் மன்றத் துணைத் தலைவா் சி. நாகராஜன், கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, தமிழிசை மன்றப் பொதுச் செயலா் தி.கு. ரவிச்சந்திரன் வரவேற்றாா். நிறைவாக, மன்றப் பொருளாளா் இராம. அசோக்குமாா் நன்றி கூறினாா்.
இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை மாலை நித்திய சுந்தர நாட்டியப்பள்ளி மாணவிகளின் நாட்டியம், பிளஸினியா மகிழினி, பாஸ்டினா மிருளானி பாட்டு, சுவாமிநாதனின் வீணை, திருச்சி வளனாா் வணிகக் கலை சிறகுகள் அமைப்பின் நாட்டுப்புற நிகழ்ச்சி, சுந்தரமூா்த்தி நாயனாா் என்கிற நாட்டிய நாடகம், புலவா் ராமலிங்கம் தலைமையில் பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றன.
நிறைவு நாளான சனிக்கிழமை பாட்டு, இசை சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, இன்னிசை நிகழ்ச்சி, பெருவங்கியம் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளன.