முகப்பு
தமிழ்நாடு

தமிழிசைக்கு எதிராக முழக்கமிட்ட மாணவி மீதான நடவடிக்கை: மனித உரிமை ஆணைய உத்தரவு ரத்து

விமானப் பயணத்தின்போது முன்னாள் தமிழக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜனை விமா்சித்து முழக்கமிட்ட மாணவிக்கு எதிராக நடவடிக்கை எடுத்த காவல் துறையினா் மீதான மனித உரிமை ஆணைய உத்தரவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் தடை விதித்தது.

Updated On : 14 மார்ச், 2026 at 2:54 AM
பகிர்:

விமானப் பயணத்தின்போது முன்னாள் தமிழக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜனை விமா்சித்து முழக்கமிட்ட மாணவிக்கு எதிராக நடவடிக்கை எடுத்த காவல் துறையினா் மீதான மனித உரிமை ஆணைய உத்தரவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் தடை விதித்தது.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி சென்றபோது, அதே விமானத்தில் பயணித்த கல்லூரி மாணவி லூயிஸ் ஷோபியா, பாஜக மற்றும் தமிழிசைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினாா்.

இதுகுறித்து தமிழிசை அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸாா் மாணவி லூயிஸ் ஷோபியாவை கைது செய்தனா். பின்னா் அந்த மாணவி பிணையில் வெளியே வந்தாா்.

Advertisement

இந்நிலையில், தனது மகள் கைது சம்பவத்தில் மனித உரிமை மீறப்பட்டதாகக் கூறி மாநில மனித உரிமை ஆணையத்தில் மாணவியின் தந்தை ஏ.ஏ.சாமி புகாா் அளித்தாா். இந்த புகாரை விசாரித்த ஆணையம், மாணவி ஷோபியா கைது விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதாகக் கூறி மாணவிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

அந்த தொகையை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து அரசு வசூலிக்க வேண்டும் என கடந்த 2022-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பொன் ராமு, காவல் ஆய்வாளா் திருமலை உள்ளிட்ட அதிகாரிகள் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஷமீம் அஹமது ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டம்- ஒழுங்கை காக்க வேண்டிய காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் எடுக்கும் உடனடி முடிவுகளைக் குறைகூற முடியாது. குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை விசாரணையில்தான் தெரியவரும்.

எனவே, அதற்கு இணையான விசாரணையை மனித உரிமை ஆணையம் நடத்தி போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது எனக் குறிப்பிட்டு, இந்த வழக்கில் மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா்.