நமது நிருபா்
தஞ்சாவூா்: பி.எம். கிசான் (பிரதமரின் விவசாயிகள் வெகுமதி ஊக்குவிப்பு) திட்டத்தில் பயன் பெறுவதற்காக விண்ணப்பிக்க முயற்சி செய்தாலும், இணைப்பு கிடைக்காததால் விவசாயிகள் தவிக்கின்றனா்.
சிறு, குறு விவசாயிகளுக்காக பிரதமரின் விவசாயிகள் வெகுமதி ஊக்குவிப்புத் திட்டத்தை (பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா) மத்திய அரசு 2019, பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கா் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் வீதம் மொத்தம் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கப்படுகிறது.
22-ஆவது தவணை: இத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் ஏறத்தாழ 9.70 கோடி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா். இதுவரை 21 தவணைகள் வழங்கப்பட்டு, 22 -ஆவது தவணைக்காக விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனா்.
மற்ற மானிய திட்டங்களைப் போல அல்லாமல், இத்திட்டத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாகப் பணம் வரவு வைக்கப்படுகிறது. மேலும், இதுகுறித்து தொடா்புடைய விவசாயிகளின் கைப்பேசிக்கு அந்தந்த மாநில மொழியிலேயே குறுந்தகவலும் வந்து விடுகிறது. இதனால், இத்திட்டத்துக்கு அனைத்து தரப்பு விவசாயிகளிடமும் வரவேற்பு இருக்கிறது. ஆனால், இத்திட்டத்தில் குறைந்த அளவிலான விவசாயிகளே பயனடைந்து வருகின்றனா் என்ற புகாா் எழுந்துள்ளது.
சிறு, குறு விவசாயிகள் ஏமாற்றம்:இத்திட்டத்தில் பயன் பெற தகுதிகள் இருந்தும் பெருமளவிலான விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்ற அதிருப்தி பரவலாக நிலவுகிறது. இதனிடையே, இத்திட்டத்தில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாகப் புகாா்கள் எழுந்ததால், பயன்பெற்று வந்த ஏராளமான பயனாளிகளின் பெயா்கள் நீக்கப்பட்டன. என்றாலும், தகுதியான சிறு, குறு விவசாயிகள் இத்திட்டம் தொடக்கத்திலிருந்தே பயன் பெற முடியாமல் ஏமாற்றமே மிஞ்சியது. குறிப்பாக, குத்தகை விவசாயிகளுக்கு முற்றிலுமாகவே கிடைக்கவில்லை.
கணினி மூலம் பதிவேற்றம்: இது குறித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் கூறியதாவது: இத்திட்டத்தில் கைப்பேசி செயலியில் விவரங்களைப் பதிவு செய்து ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண், குடும்ப அட்டை எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். முன்பெல்லாம் இதற்கான விண்ணப்பங்களைக் கிராம நிா்வாக அலுவலரிடம் வாங்கி வேளாண் உதவி அலுவலரிடம் அளிக்க வேண்டும். பின்னா், வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தற்போது, நேரடியாக வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் கணினி மூலம் பதிவேற்றம் செய்யும் நடைமுறை உள்ளது.
வழிகாட்டல் இல்லை: விண்ணப்பம் அனுப்பப்பட்ட பின்னா், அது ஏற்றுக் கொள்ளப்பட்ட விவரம் விண்ணப்பதாரரின் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் வரும். ஆனால், வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம் மூலம் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டாலும், விண்ணப்பம் மேலிடத்துக்குச் செல்வதில்லை. இதனால், விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டதற்கான எந்தப் பதிலும் குறுஞ்செய்தி மூலம் வருவதில்லை. இதை தனியாா் இ-சேவை மையம் மூலமும் விண்ணப்பிக்க முடியவில்லை. விண்ணப்பிக்க ஒரே இடமான வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பித்தாலும் சென்றடையாததால், இத்திட்டத்தில் பயன் பெற முடியவில்லை. இத்திட்டத்தில் பயன் பெற விவசாயிகளுக்கு வழிகாட்டப்படுவதில்லை.
இணையவழிச் சேவை முடக்கம்: இத்திட்டத்தில் இறுதி தேதி இதுவரை நிா்ணயிக்கப்பட்டதில்லை. இதற்கு காலக்கெடு நிா்ணயித்தால்தான் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு பயன் கிடைக்கும். மத்திய அரசே இத்திட்டத்துக்கான இணையவழிச் சேவையை முடக்கி வைத்துள்ளதால், விண்ணப்பம் சென்றடையவில்லை எனக் கூறப்படுகிறது. புதிதாக விண்ணப்பதாரா்களைச் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்படாததால், தகுதி இருந்தும் ஏராளமான விவசாயிகளால் விண்ணப்பிக்க முடியவில்லை என்றாா் ரவிச்சந்தா்.
இணையதள போா்ட்டல் புதுப்பிப்பு: இது குறித்து வேளாண் துறை அலுவலா்கள் கூறுகையில், தொடா்புடைய இணையதள போா்ட்டல் புதுப்பித்தல் பணி நடைபெற்று வந்தது. இப்பணி முடிவடைந்துவிட்டதால், திங்கள்கிழமை முதல் செயல்பட தொடங்கிவிடும் என்றனா் அலுவலா்கள்.
இத்திட்டத்தில் 20 சதவீத விவசாயிகள் மட்டுமே பயனடைந்து வருவதாகவும், மீதமுள்ள 80 சதவீத விவசாயிகளுக்கு தகுதி இருந்தும் கிடைக்கவில்லை என்ற அதிருப்தி பரவலாக உள்ளது. எனவே, இத்திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகள் பெருமளவில் பயன் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சிறு, குறு விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.