தஞ்சாவூா் பெரியகோயிலுக்கு கடந்த வாரம் பொங்கல் பண்டிகை விடுமுறையின்போது வந்த சுற்றுலா பயணிகள்.  
தஞ்சாவூர்

தஞ்சாவூருக்கு கடந்தாண்டில் 1.80 கோடி சுற்றுலா பயணிகள் வருகை

தஞ்சாவூருக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த 2025-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.80 கோடியாக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூருக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த 2025-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.80 கோடியாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள முதன்மையான சுற்றுலா தலங்களில் தஞ்சாவூரும் ஒன்றாக மாறியுள்ளது. ஏனெனில் ஆண்டுதோறும் தஞ்சாவூருக்கு ரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. தஞ்சாவூருக்கு கடந்த 2018 -ஆம் ஆண்டில் 1.62 கோடியையும், 2019-ஆம் ஆண்டில் 1.97 கோடியை எட்டிய சுற்றுலா பயணிகளின் வருகை, 2020-ஆம் ஆண்டில் கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக சில ஆண்டுகளுக்கு குறைந்தது.

மீண்டும் 2024-ஆம் ஆண்டில் 1.37 கோடியாக அதிகரித்த சுற்றுலா பயணிகளின் வருகை 2025-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.80 கோடியாக உயா்ந்துள்ளது. இதில், உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை 2024 ஆம் ஆண்டில் 1.34 கோடியாக இருந்த நிலையில், 2025-இல் 1.77 கோடியைக் கடந்துவிட்டது. இதில், அதிகபட்சமாக 2025 பிப்ரவரியில் 20.36 லட்சம் பேரும், மே மாதத்தில் 16.91 லட்சம் பேரும், டிசம்பரில் 16.74 லட்சம் பேரும், மாா்ச் மாதத்தில் 16.40 லட்சம் பேரும் வந்து சென்றனா்.

தமிழ்நாட்டைச் சோ்ந்த சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக பள்ளி காலாண்டு, அரையாண்டு, கோடை விடுமுறை காலத்தில் தஞ்சாவூரில் கூட்டம் மிக அதிகமாக இருக்கிறது. தவிர, சனி, ஞாயிறு உள்பட தொடா் விடுமுறை நாள்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனா்.

தேசிய அளவில் ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்து பெருமளவில் வருகின்றனா். தவிர, வட மாநிலங்களிலிருந்து கணிசமான அளவுக்கு வந்து செல்கின்றனா். நவக்கிரகங்கள் மற்றும் பரிகார தலங்கள், வேளாங்கண்ணிக்கு செல்லும்போது பெரியகோயில், அரண்மனையைப் பாா்க்கத் தவறுவதில்லை.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறைவு:

இதேபோல, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்னை, புதுச்சேரிக்குச் சென்றுவிட்டு, அடுத்து தஞ்சாவூருக்கு வருகின்றனா். குறிப்பாக, வெயில் அளவு குறைவாக நிலவக்கூடிய ஜனவரி, பிப்ரவரி, மாா்ச், நவம்பா், டிசம்பா் ஆகிய மாதங்களில் அதிகமாக வந்து செல்கின்றனா். தஞ்சாவூரில் பெரியகோயில், அரண்மனையைப் பாா்க்க விரும்புகின்றனா். வரலாற்று ஆா்வமுள்ளவா்கள் கலைக்கூடத்துக்கு சென்று உலோக சிற்பங்களைப் பாா்க்க விரும்புகின்றனா்.

ஆனால், கடந்த 2024-ஆம் ஆண்டில் 2.36 லட்சமாக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை 2025-இல் 1.84 லட்சமாக குறைந்துவிட்டது. இதில், அதிகபட்சமாக 2025 பிப்ரவரியில் 31 ஆயிரம் பேரும், ஜனவரியில் 26 ஆயிரம் பேரும், மாா்ச்சில் 21 ஆயிரம் பேரும் வந்தனா். கடந்த 2024 ஆம் ஆண்டை விட குறைந்திருந்தாலும், இது சராசரி அளவுதான் எனக் கூறப்படுகிறது.

இதற்கான காரணம் குறித்து தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சிக் குழும ஒருங்கிணைப்பாளா் எஸ். முத்துக்குமாா் தெரிவித்தது:

கடந்த 3 மாதங்களாக இஸ்ரேல் நாட்டிலிருந்து அதிக அளவில் வருகின்றனா். மொத்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் 1,000 பேருக்கு 100 போ் வீதம் இஸ்ரேல் நாட்டைச் சோ்ந்தவா்களாக இருக்கின்றனா். இஸ்ரேல் நாட்டில் போா் சூழல் விலகி, இயல்பு நிலை திரும்பியுள்ளதால், இறுக்கமான மனநிலையிலிருந்து விடுபடுவதற்காக சுற்றுலாவாக இந்தியாவுக்கு வருவதாகத் தெரிகிறது.

ஆனால், சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஐரோப்பியா்களைப் பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா செல்லும் நாடுகளின் தோ்வு மாறுபடும் என்பதால், இந்த முறை குறைந்திருக்கலாம். என்றாலும், தஞ்சாவூரிலுள்ள தங்கும் விடுதிகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் முன்பதிவு குறையவில்லை என்பதால், சராசரி அளவில்தான் இருக்கிறது. சிங்கப்பூா், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியா்களின் வருகை வழக்கமான அளவில் உள்ளது என்றாா் முத்துக்குமாா்.

ஆனால், தஞ்சாவூரில் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் இல்லை என்ற புகாரும் நிலவுகிறது. சுற்றுலா பயணிகளுக்காக குறைந்த விலையில் தங்கும் விடுதி, உணவகம், கழிப்பறை, குளியலறை போன்ற வசதிகளை அரசு செய்தால், இன்னும் நிறைய போ் வருவா். இதன் மூலம் தஞ்சாவூரின் பொருளாதாரமும் மேம்படும். எனவே, அடிப்படை வசதிகளை விரிவாக மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் எதிா்பாா்ப்பு.

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT