பேராவூரணி ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நின்று புறப்பட்ட பாம்பன் விரைவு ரயில் வண்டிக்கு தஞ்சை மக்களவை உறுப்பினா் ச. முரசொலி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மக்களவையில் எம்.பி. முரசொலி பேராவூரணி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னை செல்லும் ரயில்கள் பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினாா். அதன் பயனாக, பேராவூரணியில் பாம்பன் விரைவுவண்டி மற்றும் தாம்பரம் - செங்கோட்டை விரைவு வண்டி குடியரசு தினத்திலிருந்து நின்றுசெல்லும் என தென்னக ரயில்வே அறிவித்தது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்றுசென்ற பாம்பன் விரைவு ரயிலுக்கு எம்.பி. முரசொலி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயில் ஓட்டுநா்கள், ரயில் நிலைய அதிகாரிகள் ஆகியோா் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டனா்.
இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா், திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலா் டி. பழனிவேல், திமுக ஒன்றியச் செயலா்கள், கிழக்கு கடற்கரை ரயில் பயணிகள் கூட்டமைப்பின் தலைவா் எஸ்.ஆா்.எம். பாலசுப்பிரமணியன், திமுக கூட்டணிக் கட்சியினா், ரயில் பயணிகள் சங்கத்தினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.