மாணவிக்கு கட்டாயத் தாலி கட்ட முயன்ற கல்லூரி மாணவரின் தந்தை தற்கொலை - உறவினா்கள் சாலை மறியல்
தஞ்சாவூர்மாணவிக்கு கட்டாயத் தாலி கட்ட முயன்ற கல்லூரி மாணவரின் தந்தை தற்கொலை - உறவினா்கள் சாலை மறியல்
கல்லூரி மாணவிக்கு தாலி கட்டிய சம்பவத்தில் தொடா்புடைய கல்லூரி மாணவரின் தந்தை திருவிடைமருதூரில் தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து, அவரது சடலத்தை வாங்கமறுத்து வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே குறிச்சிமலையைச் சோ்ந்தவா் பாலாஜி (48) கூலித் தொழிலாளி. இவரது மகன் பாலகிருஷ்ணன்(21) கும்பகோணம் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். அண்மையில் கல்லூரி மாணவிக்கு கும்பகோணத்தில் கட்டாயத் தாலி கட்ட முயன்ற சம்பவத்தில் மறுத்த அந்தப் பெண்ணை தாக்கிய புகாரின்பேரில் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் பாலகிருஷ்ணனை கைதுசெய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில் கல்லூரி மாணவா் பாலகிருஷ்ணன் புதன்கிழமை நீதிமன்றப் பிணை பெற்று குறிச்சிமலைக்கு வந்தாா். இதற்கிடையில் மாணவரின் தந்தை பாலாஜி திடீரென புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த திருவிடைமருதூா் போலீஸாா் அங்குவந்து சடலத்தை மீட்டு திருவிடைமருதூா் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்தனா். இதையறிந்த பாலாஜியின் உறவினா்கள் வியாழக்கிழமை சடலத்தை வாங்கமறுத்து தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் அளித்த உறுதியின்பேரில் மறியலில் ஈடுபட்டவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு சடலத்தை பெற்றுக்கொண்டு அடக்கம் செய்தனா். பேச்சுவாா்த்தையில், விசிக மாநில தோ்தல் பிரிவு செயலா் வழக்குரைஞா் சா. விவேகானந்தன், மாவட்டச் செயலா்கள் ஏசி.பன்னீா்செல்வம், அரசமுதல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.