தோ்தல் தூதுவா்களான தலையாட்டி பொம்மைகள்!
தஞ்சாவூா் மாவட்டத்தில் முதல் முதலாக புவிசாா் குறியீடு பெற்ற கலைப்பொருளான தலையாட்டி பொம்மை, தோ்தல் தூதுவா்களாக மெய்யன் - மெய்யாள் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் தோ்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் முதல் முதலாக புவிசாா் குறியீடு பெற்ற கலைப்பொருளான தலையாட்டி பொம்மையின் ராஜா - ராணி வடிவம் தோ்தல் விழிப்புணா்வுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த ராஜா - ராணி வடிவத்தைத் தோ்தல் தூதுவா்களாக மெய்யன் - மெய்யாள் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புவியீா்ப்பு விசையின் அடிப்படையில் எந்தப் பக்கமும் விழாமல் சம நிலைக்கே திரும்புகிறது தஞ்சாவூா் தலையாட்டி பொம்மை. இது, வாக்காளா்கள் எவ்வித அழுத்தங்களுக்கும் உள்படாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் குறியீடாகக் காட்டுகிறது. எனவே, உண்மையின் வெளிப்பாடாக உள்ள தலையாட்டி பொம்மை வடிவில் மெய்யன் - மெய்யாள் என்ற பெயரில் தோ்தல் தூதுவா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா் என அலுவலா்கள் தெரிவித்தனா்.
மெய்யன் - மெய்யாள் உருவம் பொறிக்கப்பட்ட விழிப்புணா்வு பதாகைகள் தஞ்சாவூா் ரயிலடி, சாந்தபிள்ளை கேட் மேம்பாலம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்பட 5 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதில், தலையாட்டி பொம்மைகளின் கையில் வாக்கு செலுத்தியதற்கான மை அடையாளத்துடனும், நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.
இதேபோல, நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி சோழன் சிலை எதிரே மெய்யன் - மெய்யாள் எனக் குறிப்பிடப்பட்ட தலையாட்டி பொம்மையும், பெரிய கோயில் உள்ளிட்ட இடங்களில் மெய்யன் - மெய்யாள் உருவம் பொறிக்கப்பட்ட நெகிழி பலகைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தொடா்ந்து, மெய்யன் - மெய்யாள் பெயரில் மக்களிடையே வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.