முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் திமுக -அதிமுக நேரடிப் போட்டி!

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 4 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாகப் போட்டியிடுகிறது.

Updated On : 28 மார்ச், 2026 at 7:21 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 4 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாகப் போட்டியிடுகிறது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவிடைமருதூா் (தனி), கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு தஞ்சாவூா், அமமுகவுக்கு திருவையாறு, தமாகாவுக்கு கும்பகோணம் ஆகியவையும், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு பாபநாசம் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

திருவிடைமருதூா், கும்பகோணம், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 7 தொகுதிகளில் திமுக நேரடியாகப் போட்டியிடுகிறது. இதேபோல, திருவிடைமருதூா், பாபநாசம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 5 தொகுதிகளில் அதிமுக களமிறங்கியுள்ளது.

இதன் மூலம், மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் திருவிடைமருதூா் (தனி), ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 4 தொகுதிகளில் மட்டுமே திமுக - அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

ஒருவருக்கு வாய்ப்பு மறுப்பு: இதில், திமுகவில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா்களான துரை. சந்திரசேகரன் (திருவையாறு), உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் (திருவிடைமருதூா்), சாக்கோட்டை க. அன்பழகன் (கும்பகோணம்), கா. அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), நா. அசோக்குமாா் (பேராவூரணி) ஆகிய 5 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகத்துக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக மேயா் சண். இராமநாதனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வைத்திலிங்கத்துக்கு வாய்ப்பு: அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் அக்கட்சியிலிருந்து விலகி கடந்த ஜனவரி மாதம் திமுகவில் இணைந்தாா். இவருக்கு ஒரத்தநாடு தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவா் இதுவரை மொத்தம் 5 முறை போட்டியிட்டு, 4 முறை வெற்றி, தற்போது 6- ஆவது முறையாக போட்டியிடுகிறாா்.

எட்டாவது முறை போட்டி: இதில், திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளராக துரை. சந்திரசேகரன் தற்போது 8-ஆவது முறையாகப் போட்டியிடுகிறாா். இதுவரை இவா் 5 முறை வெற்றியும், 2 முறை தோல்வியும் அடைந்துள்ளாா். திருவிடைமருதூா் அமைச்சா் கோவி. செழியன், கும்பகோணம் சாக்கோட்டை க. அன்பழகன் ஆகியோா் 4-ஆவது முறையாகவும், பட்டுக்கோட்டை கா. அண்ணாதுரை, பேராவூரணி நா. அசோக்குமாா் 3-ஆவது முறையாகவும் போட்டியிடுகின்றனா்.

அதிமுகவிலும் மீண்டும் வாய்ப்பு: அதிமுகவில் பட்டுக்கோட்டை தொகுதியில் 2016-இல் வெற்றி பெற்று, 2021-இல் வெற்றி வாய்ப்பை இழந்த சி.வி. சேகா், ஒரத்தநாடு தொகுதியில் 2021-இல் அமமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இணைந்த மா. சேகா் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பேராவூரணி தொகுதியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மா. கோவிந்தராசு மகன் கோவி. இளங்கோ, பாபநாசம் தொகுதியில் முன்னாள் அமைச்சா் ஆா். துரைக்கண்ணு மகன் துரை. சண்முகபிரபு ஆகியோா் அறிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.