திருச்சியிலிருந்து பறக்குமா "பட்ஜெட்' விமானம்?
உள்நாட்டுப் போக்குவரத்தை மேம்படுத்த திருச்சியிலிருந்து குறைந்த கட்டணத்தில் வாராந்திர விமானங்கள் இயக்கவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டுப் போக்குவரத்தை மேம்படுத்த திருச்சியிலிருந்து குறைந்த கட்டணத்தில் வாராந்திர விமானங்கள் இயக்கவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி விமான நிலையம் வெளிநாட்டு விமானங்களை இயக்கும் உள்நாட்டு (சுங்கத்துறை) விமான நிலையம் என்ற அந்தஸ்தில் இருந்து சர்வதேச விமான நிலையமாக தரம் உயரத்தப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிறது. திருச்சியிலிருந்து உள்நாட்டுப் போக்குவரத்தாக சென்னையைத் தவிர வேறு எந்தப் பகுதிக்கும் விமானம் கிடையாது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜெட் ஏர்வேஸ் விமானம் திருச்சி-பெங்களூருக்கு இடையே இயக்கப்பட்டது. காலப்போக்கில் அதுவும் ரத்து செய்யப்பட்டது.
பின்னர், திருச்சியிலிருந்து சென்னை வழியாக மும்பை மற்றும் தில்லிக்கு இயக்குவதாகவும் அறிவித்தது. அதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை. பின்னர் வாயுதூத் என்ற விமான நிறுவனம், தமிழகத்தில் உள்ள கோவை, மதுரை, நெல்லை மற்றும் திருப்பதி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்குவதாக அறிவித்தது, பின்னர் அதுவும் கைவிடப்பட்டது.
ஸ்பைஸ் ஜெட் விமானப் போக்குவரத்து திருச்சியில் இயங்கி வந்த காலத்தில், திருச்சியிலிருந்து சென்னை மற்றும் வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் என்ற அறிவிப்போடு நின்று போனது.
இந்நிலையில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் பல்வேறு தடைகளையும், தாமதங்களையும் தாண்டி மீண்டும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திருச்சியிலிருந்து மும்பை, தில்லி நகரங்களை இணைக்கும் வகையில் புதிய வழித்தடத்தில் விமானப் போக்குவரத்தை தொடங்கவுள்ளதாக, நிலைய இயக்குநர் கே. குணசேகரன் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.
இந்த புதிய மார்க்கத்தில் தினசரி தில்லியிலிருந்து காலை 9 மணிக்கு புறப்படும் ஜெட் ஏர்வேஸ் விமானம், முற்பகல் 11.20-க்கு மும்பையைச் சென்றடையும். பின்னர் அங்கிருந்து பகல் 12.25-க்கு புறப்பட்டு 2.10-க்கு திருச்சி விமான நிலையத்தை அடைந்து, இங்கிருந்து 2.40-க்கு புறப்பட்டு மாலை 4.50-க்கு மும்பை சென்று, அங்கிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8.20-க்கு மீண்டும் தில்லியை சென்றடையும் வகையில் இயக்கப்பட உள்ளது.
திருச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உள்நாட்டு விமான சேவை தொடங்குவது மகிழ்ச்சியாக இருந்தாலும், இது நீடிக்குமா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. ஏற்கெனவே பெங்களூர், தில்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட புதிய விமானப் போக்குவரத்து திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டதற்கும், தோல்வியுற்றதுக்கும் பல்வேறு காரணங்கள் விமான நிலைய வட்டாரங்களில் கூறப்படுகின்றன.
முதலாவதாக, உள்நாட்டுப் போக்குவரத்தில் விமான சேவை உள்ளது குறித்த தகவல்கள் மக்களை சென்றடைவதில்லை. முறையான விளம்பரங்களின்றி இயக்கப்படுவதால் பயணிகள் கூட்டம் வருவதில்லை. அதற்கு அடுத்தபடியாக அதிக கட்டண விகிதங்கள். திருச்சி-சென்னை இடையே கூட சில நேரங்களில் ரூ. 10, 000 முதல் 20,000 வரையில் நிர்ணயிக்கப்படுகிறது. நிலையான குறைந்த கட்டணமில்லை. வெளிநாட்டு விமானக் கட்டணங்களையும் விஞ்சும் அளவுக்கு உள்ளதால் பயணிகள் பின்வாங்குகின்றனர்.
எனவே, திருச்சி-சென்னை இடையே வார இறுதி நாள்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பட்ஜெட் வகையிலான விமான சேவை இயக்கப்படும் நிலையில் ரயில், பேருந்துகளில் பயணச்சீட்டு கிடைக்காதவர்கள், கண்டிப்பாக ஊர் சென்றே ஆகவேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள் விமானத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதே போல வார இறுதியில் மும்பை, தில்லி, பெங்களூரு போன்ற நகரங்களும் இயக்கப்படும் நிலையில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தும் மேம்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் வணிகர்களும், அவசர தேவைக்கு செல்வோரும்.
ரயில், பேருந்தில் செல்வோரை
விமான பயணிகளாக்க முடியும்!
திருச்சியிலிருந்து காலை, மாலை, இரவு என மூன்று வேளையிலும், சிங்கப்பூர், மலேசியா, நாடுகளுக்கும், காலை மாலையில் இலங்கைக்கும் என தினசரி 17 வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவைதவிர சென்னை -திருச்சி இடையே தினசரி காலை, மாலை இரவு என 3 வேளையும் தலா ஒரு விமானம் மட்டுமே இயக்கப்படுகிறது. மார்ச் 25-க்கு பின்னர் 4 விமானமாகின்றது. மேலும், பட்ஜெட் விமானங்களை இயக்கும் நிலை ஏற்பட்டால் இதில் 50 சதவிகித ரயில், பேருந்து பயணிகளை விமானப் பயணிகளாக்கிவிட முடியும்.