ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடிக்கும் என ஆக்சிஸ் மை இந்தியா கூறியிருப்பதைப் பற்றி...
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடிக்கும் என ஆக்சிஸ் மை இந்தியா கூறியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியமளித்திருந்தாலும், அவர்களின் முந்தையக் கணிப்புகள் அதனைவிட அனைவருக்கும் ஆச்சரியமளித்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக்கணிப்புகள் நேற்று (ஏப்.29) மாலை வெளியாகின.
அஸ்ஸாமிலும், புதுச்சேரியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்கும் என்றும், கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தொடரும் என்றும், பாஜக ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருந்தன.
Advertisement
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் கணிக்கவே முடியாத நிலையில் இருக்கும் தமிழ்நாடு பேரவைத் தேர்தல் முடிவுகளில், ஒரு சில நிறுவன கருத்துக் கணிப்புகளைத் தவிர்த்து பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாகவே அமைந்துள்ளன. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதாகக் கூறியிருக்கிறது.
ஆச்சரியமளிக்கும் வகையில் இந்தியா டுடே, ஆக்சிஸ் மை இந்தியா ஆகிய நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகளில் 98 முதல் 120 இடங்களில் வெற்றிபெற்று விஜய்யின் தவெக முதல்முறையாக ஆட்சியமைக்கும் என்றும், எம்ஜிஆர் போன்று விஜய்க்கும் பிளாக்பஸ்டர் அறிமுகமாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தன.
என்டிடிவி, சிஎன்என்,பீபள்ஸ் பல்ஸ், ஜேவிவி, மேட்ரிஸ் ஆகியவை ஒருசேர திமுக ஆட்சியமைக்கும் என்று கூறியிருக்கும் நிலையில், இந்தியா டுடே, ஆக்சிஸ் மை இந்தியா ஆகியவை விஜய்யின் தவெக ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றன.
தேர்தலுக்கு முந்தையக் கருத்துக்கணிப்புகளைவிட தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக்கணிப்புகள் மிகத்துல்லியமான முடிவுகளைக் கொடுத்திருக்கின்றன. அதற்கான எதிர்பார்ப்புகளுடன் நேற்று மாலை அனைவரும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை ஆர்வமாகப் பார்க்க காத்திருந்தனர்.
அதன்படி, ஆக்சிஸ் மை இந்தியா தவெகவுக்கு 98 முதல் 120 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து திமுக 92 முதல் 110 இடங்களைப் பெறும் என்று தெரிவித்திருக்கிறது.
இதனால், சற்று மகிழ்ச்சியடைந்துள்ள விஜய்யின் தவெகவினர் பலரும் ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா? தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்குமா? எம்ஜிஆர் போலவே விஜய்யும் முதல்வராகப் பதவியேற்பாரா? என எதிர்பார்ப்புகளும் கேள்விகளும் அதிகரித்திருக்கின்றன.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக தவெகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், “இலங்கையிலும், நேபாளத்திலும், வங்கதேசத்திலும், பஞ்சாபிலும் கருத்துக்கணிப்புக்குப் பின்னர் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
கருத்துக்கணிப்புக்கும் வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்போது தவெக தலைவர் விஜய்யின் விசில் புரட்சிதான் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உலகளவில் தெரியப் போகிறது. 200 தொகுதிகளுக்கு மேல் த.வெ.க வெற்றிப்பெறும். விஜய்யின்தான் தமிழ்நாட்டை ஆளப்போகிறார்” என்றும் கூறி சற்று ஆறுதல் படுத்தியிருக்கிறார்.
ஆனால், மற்ற கருத்துக்கணிப்புகளுடன் ஒப்பிடும்போது ஆக்சிஸ் மை இந்தியாவின் கருத்துக்கணிப்புகள் சற்றே வேறுபட்டு இருந்தாலும், அவர்களின் தரவுகளையும் சாதாரணமாக எண்ணிவிட முடியாது என்று அரசியல் விமர்சர்கள் பலரும் கூறுகின்றனர்.
2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்
2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மகா கூட்டணியின் விளைவாக, பாஜக தனித்து பெரும்பான்மை பெறமுடியாது என்று பலர் கணித்திருந்தனர்.
ஆனால், ஆக்சிஸ் மை இந்தியா மட்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 339-365 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கூறியிருந்தது போலவே, 353 இடங்களில் வெற்றி பெற்றது.
2022 பஞ்சாப் தேர்தல்
பெரும்பாலான கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெறும் அல்லது தொங்கு சட்டப்பேரவை அமையும் என்று கணித்த நிலையில், ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் ஆம் ஆத்மி கட்சி 76 முதல் 90 இடங்களைப் பெற்று மாபெரும் வெற்றி பெறும் என்று கணித்தது.
அதுபோலவே, ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களைக் கைப்பற்றி, காங்கிரஸ் மற்றும் அகாலி தளம் ஆகிய இரு கட்சிகளையும் தோற்கடித்தது.
2023 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச தேர்தல்
மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சௌஹானுக்கு எதிராக 18 ஆண்டுகளாக நிலவி வந்த ஆட்சிக்கு எதிரான மனநிலை காரணமாக, காங்கிரஸ் கட்சி குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் அல்லது கடுமையான போட்டி நிலவும் என்று பெரும்பாலான நிறுவனங்கள் கணித்திருந்தன.
ஆனால், ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம், பாஜக 140 முதல் 162 இடங்களைப் பெற்று மாபெரும் வெற்றி பெறும் என்று கணித்தது போலவே, பாஜக 163 இடங்களை வென்றது.
2024 ஆம் ஆண்டு மஹாராஷ்டிர தேர்தல்
தேசிய ஜனநாயகக் கூட்டணி கடுமையான சவாலை எதிர்கொள்ளும் என்றும், மஹாவிஹாஸ் அகாதி வெற்றி பெறும் என்று கூறிய நிலையில், மகாயுதி கூட்டணி 178 முதல் 200 இடங்களைக் கைப்பற்றி வெற்றிபெறும் என ஆக்சிஸ் மை இந்தியா தெரிவித்திருந்தது.
கருத்துக் கணிப்புகள் எதிர்பார்த்ததை விடவும் மகாயுதி கூட்டணி 235 தொகுதிகளில் வெற்றி பெற்று தேர்தல் முடிவை மாற்றியது.
தில்லி பேரவைத் தேர்தல்
2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தில்லிக்கு பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் ஆம் ஆத்மி கட்சிக்கு கடும் போட்டி நிலவும் அல்லது சொற்ப வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்று கணித்திருந்தன.
ஆக்சிஸ் மை இந்தியா மட்டும் அனைவரிடமிருந்து விலகி, பாஜக 45 முதல் 55 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்திருந்தது. அதேபோல், பாஜக 48 இடங்களை வென்று தலைநகர் தில்லியில் அரவிந்த் கேஜரிவாலின் பத்தாண்டு கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.
தமிழ்நாட்டு பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக ஆட்சியமைக்கும், சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின்கூட வெற்றிக்கு கடுமையாகப் போராடும் என்று ஆக்சிஸ் மை இந்தியா கணித்துள்ளது. யார் கணிப்புகள் சரியாக இருக்கும் என்பது மே 4 ஆம் தேதி தெரியவரும்!