பேக்கரியில் தீ விபத்து? பெண் சாவு; மகள் காயம்
திருச்சி எடத்தெரு பகுதியில் உள்ள பேக்கரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மகள் படுகாயங்களுடன்
திருச்சி எடத்தெரு பகுதியில் உள்ள பேக்கரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மகள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்சி பாலக்கரை எடத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (55). அவரது மனைவி மல்லிகா (45), மகள் சுவாதி (27). இவர்களுக்கு சொந்தமான பேக்கரி அதே பகுதியில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு பேக்கரியை மூட முயன்றபோது, தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே தீ மள மளவென எரியத் தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கிடையே வெளியே சென்றிருந்த சேகர், கடைக்குத் திரும்பினார். பின்னர், பேக்கரியின் உள்ளே தீக்காயத்துடன் இருந்த மல்லிகா, சுவாதி இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில், மல்லிகா சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை உயிரிழந்தார். சுவாதி பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து பாலக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தா, நாடகமா ?: சுவாதியும் திருச்சி சிறப்பு காவல் படையில் காவலராக பணியாற்றும் தங்கவேல் என்பவரும் பெற்றோருக்கு தெரியாமல் கடந்தாண்டு காதலித்து பதிவுத் திருமணம் செய்து, அவரவர் வீட்டில் வசித்து வந்தனர். தற்போது, சுவாதி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், சுவாதியை கணவருடன் சேர்த்து வைப்பது குறித்து ஞாயிற்றுக்கிழமை உறவினர்களுடன் பேச்சு நடந்தது. இதில் திங்கள்கிழமை சுவாதியை தங்கவேலு வீட்டிற்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். இந்த திருமணத்தில் சேகருக்கு விருப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் பேக்கிரியில் திடீர் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளதால், தீ விபத்து நாடகமா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை இரவு நீதிபதியிடம் மல்லிகா அளித்த வாக்குமூலத்தில் , குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.