தமிழ் அமைப்புகள் இளைஞர்களை ஈர்க்க வேண்டும்
இளைஞர்களை ஈர்ப்பதற்காக தமிழ் அமைப்புகள் செயலாற்ற வேண்டும் என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற மொழிபெயர்ப்புத் துறைத் தலைவர் முனைவர் பழனி. அரங்கசாமி.
இளைஞர்களை ஈர்ப்பதற்காக தமிழ் அமைப்புகள் செயலாற்ற வேண்டும் என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற மொழிபெயர்ப்புத் துறைத் தலைவர் முனைவர் பழனி. அரங்கசாமி.
ஸ்ரீரங்கம் இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு சார்பில் திருக்குறள் தெளிவுரை நூல் வெளியீட்டு விழா மற்றும் தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற பேராசிரியர் ப. சுப்பிரமணியன், வி.அ. இளவழகன் ஆகியோருக்கான பாராட்டு விழா திருச்சி தமிழ்ச்சங்க வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் நூல்களை வெளியீட்டு பழனி. அரங்கசாமி மேலும் பேசியது:
உலகில் பைபிளுக்கு அடுத்த அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது உலக பொதுமறையான திருக்குறள்தான். அதை பலரும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்திருந்தாலும் பரிமேலழகரின் உரை சிறப்பாக உள்ளது.
தமிழ் அமைப்புகள் இலக்கியக் கூட்டங்கள் மற்றும் இதரக் கூட்டங்களை நடத்துவதோடு நின்றுவிடாமல், இளைஞர்களை ஈர்ப்பதற்கான செயல்களிலும் ஈடுபட வேண்டும். இளைஞர்களை இலக்கியம் பக்கம் திருப்ப வேண்டும். அப்போது தமிழை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றார் அவர்.
எழுத்தாளர் பிரேமா நந்தகுமார் தலைமை வகித்தார். இதைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் அ. கலியமூர்த்தி, திருச்சி வானொலி நிலைய நிகழ்ச்சிப் பிரிவு இயக்குநர் க. நடராசன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அகராதி இயல் துறையைச் சேர்ந்த முனைவர் உல. பாலசுப்பிரமணியன் ஆகியோர் விருது பெற்றவர்களை வாழ்த்தினர்.
முன்னதாக பழனி அரங்கசாமி வெளியிட்ட நூலை க. நடராசன், திருச்சி தமிழ் இசைச் சங்க நிகழ்ச்சிச் செயலர் ப. ராமதாசு, க,. தமிழழகன், முனைவர் அ.கோபிநாத் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். முனைவர் ப. சுப்பிரமணியன், வி.அ. இளவழகன் ஆகியோர் ஏற்புரையாற்றினர். முனைவர் சு. செயலாபதி, ப. பிரபு இணைப்புரை வழங்கினர். முன்னதாக, இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கின் பொறுப்பாளர் இராச. இளங்கோவன் வரவேற்றார். சு. செந்தில்குமரன் நன்றி கூறினார்.