மணப்பாறை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் சிறுவன் சாவு; 15 பேர் காயம்
மணப்பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் உயிரிழந்தான். 15 பேர் காயமடைந்தனர்.
மணப்பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் உயிரிழந்தான். 15 பேர் காயமடைந்தனர்.
தூத்துக்குடி வேம்பார் ஊராட்சியை சேர்ந்த பொம்மை நாடார் மகன் குருசேவ் (55). பழைய இரும்பு வியாபாரம் செய்து வரும் இவரது மகன் ஆருணுக்கு கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடந்தது. இதையடுத்து, மகாபலிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் உறவினர்கள் 23 பேர் கலந்து கொண்டு விட்டு வேனில் ஊருக்கு புறப்பட்டனர்.
திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அருகே சொரியம்பட்டி பிரிவு பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ரோந்து போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் விருதுநகர் மாவட்டம், காளையார் கரிசல்குளத்தைச் சேர்ந்த சீனிமுத்து மகன் யேசுராஜ்(13) உயிரிழந்தார். காயமடைந்த அஜித்குமார்(20), சின்ன கணேசன்(55), சின்ன கதிரேசபாண்டி(11), காவ்யா(8), சூர்யா(12), கனகா(32), காவ்யா(15), ஜெயா(38), உமா(16), திருமணச்செல்வி(27) உள்பட 15 பேரும் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து வளநாடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.