முகப்பு
திருச்சி

திருச்சி வந்த திமுக தலைவருக்கு உற்சாக வரவேற்பு

திமுக தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த மு.க. ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் தாரை,  தப்பட்டைகள் முழங்க, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:56 AM
பகிர்:

திமுக தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த மு.க. ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் தாரை,  தப்பட்டைகள் முழங்க, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் பாலம் மற்றும் மதகுகள் உடைந்த பகுதிகளை திங்கள்கிழமை பார்வையிடும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தொடர்ந்து, நாகை மாவட்டம், திருக்குவளையில் தனது தந்தை கருணாநிதி பிறந்த இல்லத்துக்குச் சென்று அவரது படத்துக்கும், தாத்தா, பாட்டி படங்களுக்கும் அஞ்சலி செலுத்துகிறார். 
இதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி விமான நிலையம் வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குதிரைகள் பொருத்திய சாரட் வண்டி விமான நிலைய முக்கிய பிரமுகர் அறைக்கு வெளியே தயாராக வைக்கப்பட்டிருந்தாலும், அதில் அவர் ஏறாமல் காரில் ஏறி நின்று தொண்டர்களையும், பொதுமக்களையும் பார்த்து கையசைத்தவாறே வந்தார்.
இதைத் தொடர்ந்து, விமான நிலையத்துக்கு வெளியே ( திருச்சி- புதுக்கோட்டை சாலை) அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் நின்றவாறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் வாழ்த்துகளைப் பெற்றார். அவர்கள் அளித்த சால்வை, நூல்களை அவர் பெற்றுக் கொண்டார். முன்னதாக மேடைக்கு அருகில்  தனக்கு மாலை அணிவித்த  யானைக்கு ஸ்டாலின் பழங்களை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, மு.க. ஸ்டாலினுக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், மேற்குத் தொகுதி எம்எல்ஏவுமான கே.என். நேரு வீரவாளை பரிசாக வழங்கினார். நிகழ்வில், மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலு,  மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, எம்எல்ஏக்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அ. சௌந்தரபாண்டியன், செ. ஸ்டாலின்குமார்,  பெரியண்ணன் அரசு, மாவட்டச் செயலர்கள் திருச்சி வடக்கு காடுவெட்டி ந. தியாகராஜன்,  கரூர் நன்னியூர் ராஜேந்திரன்,   முன்னாள்  எம்.பி. ஏ.கே.எஸ். விஜயன், மாநகர திமுக செயலர் மு. அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மலர்தூவி வரவேற்பு: விமான நிலையத்திலிருந்து சிறப்பு மேடை வரை காரில் நின்றவாறே வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு விமான நிலையத்துக்குள் இருபுறங்களிலும் நின்ற பெண்கள் மலர்தூவி வரவேற்றனர். தொடர்ந்து வாணவேடிக்கைகளும் நடந்தன. பேண்டு வாத்தியக் குழுவினர், தாரை தப்பட்டை குழுவினர் பாடல்களை இசைத்தனர்.
எம்கேஎஸ் ஆன ஸ்டாலின் :  திருச்சி மாவட்ட திமுக சார்பில் இதுவரை வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளில் மு.க. ஸ்டாலின் என்றே குறிப்பிட்டப்பட்டிருந்த நிலையில்,  ஞாயிற்றுக்கிழமை வைக்கப்பட்டிருந்த பதாகைகளில் எம்.கே.எஸ். எனக் குறிப்பிட்டிருந்தது கட்சியினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும்,  ஸ்டாலினை வரவேற்று கட்சியினர் முழக்கம் எழுப்பியபோதும் எம்கேஎஸ் என்றே குறிப்பிட்டனர்.
காதர் மொய்தீன் இல்லத்துக்குச் சென்ற ஸ்டாலின்: உடல்நலக் குறைவால் சிகிச்சை பெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர்மொய்தீன் மனைவி லத்திபா பேகத்தை  மன்னார்புரம் காஜாநகர் பகுதியிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்தார் திமுக தலைவர்.
இன்று காலை முக்கொம்பு பார்வை:  திங்கள்கிழமை காலை முக்கொம்பு மேலணைப் பகுதிக்குச் சென்று கொள்ளிடம் ஆற்றில் மதகுகள் உடைந்த பகுதியைப் பார்வையிடும் திமுக தலைவர் ஸ்டாலின்,  பணிகளின் விவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, பின்னர் திருச்சி வந்து தஞ்சாவூர், திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் செல்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.