திருச்சி

ரயில் நிலையங்களைப் போன்று தனியார்மயமாகிறது சரக்கு முனையங்கள்!

DIN

ரயில் நிலையங்களைப் போலவே,  முதல் கட்டமாக சுமார்  286  சரக்கு முனையங்களும்  தனியார் மயமாக்கப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 
சென்னை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள சுமார் 400 ரயில் நிலையங்கள் நவீனப் படுத்தப்படும் என்ற வகையில் தேர்வு செய்யப்பட்டு அவற்றை  படிப்படியாக  தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டு வருகிறது.  அதேபோல சரக்குப் போக்குவரத்துப் பிரிவிலும் மேற்கொள்ள ரயில்வே அமைச்சகம் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் முதல்கட்டமாக 286  சரக்கு (குட்ஷெட்)  முனையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில், முன்அனுபவம் மற்றும் விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் அக்டோபர் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ரயில்வே இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஒப்பந்தப்படி,   குறைந்த பட்சம்  பத்து ஆண்டுகளுக்கு குறையாத திட்டங்கள் தர வேண்டும். வர்த்தக நோக்கத்தை தெளிவுபடுத்த வேண்டும். ரயில்வே நிர்வாகத்தின்  அசையா சொத்துக்களை ஒப்பந்ததாரருக்கு வழங்க முடியாது, ரயில்வே வசமே இருக்கும் என்பன உள்ளிட்ட  விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. 
தெற்கு ரயில்வேயில் திருச்சி, தஞ்சை, சேலம் மார்க்கெட், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், அரக்கோணம், முன்டியம்பாக்கம், காட்பாடி, கொருக்குப்பேட்டை, மேல்பாக்கம், கூடல்நகர், மானாமதுரை, மீளவிட்டான், திருநெல்வேலி, திண்டுக்கல் என தமிழகப் பகுதியில் 16 சரக்கு முனையங்களும் (குட்ஷெட்) மற்றும் கேரளப் பகுதியில் 4 என மொத்தம் 20 முனையங்கள்  இந்த நவீன மற்றும் தனியார் மயமாக்கல் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அவற்றுக்கான நிலைய இயக்குநர்களும் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். 
தெற்கு ரயில்வே குட்ஷெட்டுகள் நவீனமயமாக, தரம் உயர்த்த குட்ஷெட் முனைய இயக்குநர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மிகப்பெரிய தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் இதில் களமிறங்குவதால், ரயில்வே துறைக்கு  செலவு இல்லாமலேயே சரக்கு முனையங்கள் ( குட்ஷெட்டுகள்)  கூடுதல் வசதிகளுடன் பராமரிக்க வழியுள்ளது.  அதே நேரம் ரயிலில் சரக்குகள் ஏற்றி இறக்க பயன்படும் லாரிகள், டிரக்குகள் சுமைதூக்கும் பணிகள், போன்றவற்றுடன் அவற்றுக்கான கட்டணங்களும்  சரக்கு முனைய இயக்குநரின் கட்டுப்பாட்டில் இருக்கும் . 
இது குறித்து தெற்கு ரயில்வேயின்,  தக்ஷிண  ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் மனோகரன் கூறுகையில், குட்ஷெட் முனைய இயக்குநர்கள் நிர்வகிப்பர். இதில், ஈடுபட இருக்கும் பெரிய நிறுவனங்கள் சரக்குகளை ஏற்றி, இறக்க  அதிநவீன இயந்திரங்கள், தங்கள் சொந்த வாகனங்களை  பயன்படுத்தும் நிலை ஏற்படும். இதனால் சரக்கு கையாளும் கட்டணம் உயர்வதுடன், ரயில்வே சரக்கு முனைய  குமாஸ்தாக்கள், சுமைப்பணியாளர்கள் உள்ளிட்டோர்  பணியை இழக்கும் அபாயமும் ஏற்படும்.  எனவே, நவீனமயம் என்ற பெயரில் குட்ஷெட்டுகளை  தனியார் மயமாக்கும் நடவடிக்கையை ரயில்வே கைவிட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT