திருச்சி

திருச்சி அருகே கோயில் விழா நெரிசலில் சிக்கி 7 பேர் பலி: 11 பேர் காயம்

DIN

திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள முத்தியம்பாளையம் வண்டித்துரை கருப்புசாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்; 11 பேர் காயமடைந்தனர். போலீஸார் வழக்கு பதிந்து பூசாரி தனபாலைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மண்ணச்சநல்லூரைச் சேர்ந்தவர் தங்கராஜு மகன் தனபால் (55). இவர், முத்தியம்பாளையம் வண்டித்துரை கருப்புசாமி கோயிலில் விசேஷ நாட்களில் குறி சொல்லி பிடிகாசு வழங்குவது வழக்கம். தேர்தல் பாதுகாப்பு காரணமாக, 16 ஆவது சித்ரா பௌர்ணமி தின பிடிகாசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டதாம். 
விழாவை முன்னிட்டு,  பெரம்பலூர், சேலம், நாமக்கல், கடலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சனிக்கிழமை இரவே கோயிலுக்கு வந்தனர். 
ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தனபால் குறிசொல்லி பிடிகாசு வழங்கத் தொடங்கினார். அப்போது திடீரென ஏற்பட்ட தள்ளுமுள்ளு கூட்ட நெரிசலில் ஒருவர் மீது ஒருவர் ஏறிச் சென்றதாகக் கூறப்படுகிறது. 
இதில், சேலம் மாவட்டம் மங்களாபுரத்தைச் சேர்ந்த செல்வம் மனைவி கந்தாயி(38), பெரம்பலூர் மாவட்டம் பிள்ளான்குளத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் ராமர்(50), நாமக்கல் மாவட்டம் சேந்தமங்களம் கோனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த அப்புசாமி மனைவி சாந்தி(50), கடலூர் மாவட்டம், பினையாந்தூரைச் சேர்ந்த வெங்கடாசலம் மனைவி பூங்காவனம்(50), முருகன்குடியைச் சேர்ந்த கனகசபை மகன் ராசவேல்(36), கள்ளக்குறிச்சி அருகே வட பொன்பரப்பியைச் சேர்ந்த ரவி மனைவி வள்ளி(35), கரூர் மாவட்டம் செவ்வந்திபாளையத்தைச் சேர்ந்த சின்னப்பன் மகன் லட்சுமிகாந்தன்(55) உள்ளிட்ட 7 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 
மேலும் அரசம்பட்டியைச் சேர்ந்த வினிதா(18), ஜோதி(32), உளுந்தூர்பேட்டை அருகே துலங்கம்பட்டு வளர்மதி(60), திருமானூர் சரசு(65), கடலூர் பெரியசாமி(35), சேலம் பாலசந்திரன்(15), கெங்கவல்லி பச்சமுத்து மகன் ராமர்(44), வாமடம் லதா(54), ஆத்தூர் தமிழரசி(33), வாளவந்தி செல்லம்மாள்(50), கள்ளக்குறிச்சி சின்னபிள்ளை(65) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த துறையூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், காவல் துறையினர் காயமடைந்தவர்கள், சடலங்களை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.   
தகவலறிந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், முசிறி வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். 
மேலும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டுச் சென்றனர்.  கூட்ட நெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் படிக்காசு வழங்குவது சில மணிநேரம் தொடர்ந்ததாகவும், கோயில் நிர்வாகம் தரப்பில் லட்சக்கணக்கானோர் கூடுவார்கள் எனக் கூறி போலீஸ் பாதுகாப்பு கோரியும் குறைவான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. இச்சம்பவம் துறையூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு  தலா ரூ.1 லட்சம்: முதல்வர்
திருச்சி துறையூர் அருகில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:  திருச்சி  மாவட்டம்  துறையூர் வட்டம்  முத்தியம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் திருக்கோயில் ஒன்றில் பிடிகாசு வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. இந்த விழாவில் ஏற்பட்ட  கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஏழு நபர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என அதில் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் இரங்கல்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்    ஞாயிற்றுக்கிழமை சுட்டுரையில் வெளியிட்டபதிவில் கூறியிருப்பது: திருச்சியில் திருவிழா கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்த துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல். இதுபோன்ற கோயில் திருவிழாக்களில் தமிழக காவல்துறை  பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


பிரதமர் இரங்கல்
திருச்சி மாவட்டம், துறையூரில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
துறையூர் கோயிலில் நேரிட்ட கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு கவலையளிக்கிறது. இச்சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்க ஒப்புதல் அளித்துள்ளேன் என்று அந்தப் பதிவுகளில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT