உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கிரடாய் ரூ.1,700 கோடிக்கு ஒப்பந்தம்
சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் திருச்சி கிரடாய் அமைப்பு ரூ.1,700 கோடிக்கு புரிந்துணர்வு
சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் திருச்சி கிரடாய் அமைப்பு ரூ.1,700 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய இருப்பதாக அந்த அமைப்பின் தலைவர் எஸ்.ஆனந்த் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சி என்றாலே திருப்புமுனை நகரம் என்பதை நிருபிக்கும் வகையில் இந்திய மனை மற்றும் கட்டுமான வளர்ச்சிக்கான சங்கக் கூட்டமைப்பு எனப்படும் கிரடாய் சென்னையில் தமிழக அரசு நடத்த இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்பதுடன் ரூ.1,700 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தமும் போட இருக்கிறது.
இதுகுறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கிரடாய் உறுப்பினர்களில் 18 பேர் இணைந்து ரூ.1,700 கோடிக்கு முதலீடு செய்ய முன்வந்தனர். தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதற்கான ஒப்புதல் கடிதங்களையும், ஒப்பந்தங்களையும் உறுப்பினர்களின் கையெழுத்தோடு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளோம்.
இதன் முதல்கட்டமாக செவ்வாய்க்கிழமை தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், முதன்மைச் செயலாளர் ஞானதேசிகன், திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி ஆகியோரையும் சந்தித்து பேசினோம். அவர்களிடம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கு கொள்வது குறித்த திட்ட நகல்களையும்,புரிந்துணர்வு ஒப்பந்த நகல்களையும் கொடுத்திருக்கிறோம். இந்த ஒப்பந்தத்தின் மூலம் கட்டுனர்களாகிய எங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் கட்டட அனுமதி மற்றும் நிறைவுச் சான்றிதழ், மின் இணைப்பு போன்றவை உடனடியாக கிடைக்கும். அதே நேரத்தில் எங்கள் முதலீட்டின் மூலமாக குடியிருப்பு வளாகங்கள், வணிக வளாகங்கள், தொழில் நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்படவுள்ளன. இதன் மூலம் அரசுக்கு நேரடி மற்றும் மறைமுக வருமானமும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என தெரிவித்தார். பேட்டியின் போது, கிரடாய் அமைப்பின் நிர்வாகிகள் கோபிநாதன், கௌதமன், மோகன், நஸ்ருதீன், முருகானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.