திருச்சி

காவிரியாறு 70% அழிந்துவிட்டது: சத்குரு ஜக்கி வாசுதேவ்

DIN

கடந்த 50 ஆண்டுகளில் காவிரியாறு 70 சதவீதம் அழிந்துவிட்டதாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.
"காவிரி கூக்குரல்' இயக்கத்தை தொடங்கியுள்ள அவர், இயக்கத்துக்கு மக்கள் ஆதரவை திரட்டும் வகையில் தலைக்காவிரியிலிருந்து 3,500 கி.மீ. தொலைவுக்கு இருசக்கர வாகனப் பேரணியை நடத்தி வருகிறார். இந்தப் பேரணியானது கர்நாடகத்திலிருந்து, தமிழக எல்லைப்பகுதியான ஒசூர் வழியாக தருமபுரி, மேட்டூர், ஈரோடு பகுதிகளை கடந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்தது. கம்பரசம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தில் பேரணிக் குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 
இந்தப் பேரணியில் சத்குரு ஜக்கி வாசுதேவுடன், நடிகர் சரத்குமார், தேனி மக்களவை உறுப்பினர். ஓ.பி. ரவீந்திரநாத் குமார் ஆகியோரும் இருசக்கர வாகனங்களில் வந்திருந்தனர். வரவேற்பு நிகழ்வில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். இதேபோல, கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில், திமுக எம்எல்ஏ-க்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மக்களவை உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இந்த நிகழ்வில், சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியது:
நதிகளை மீட்போம் இயக்கம் நடத்தியபோது நதிகள் இணைப்புக்கு ஆதரவு தெரிவிப்பதாக மக்களிடையே தவறான புரிதலை கொண்டு சேர்த்தது. நதிகள் இணைப்பை ஒருபோதும் வலியுறுத்தவில்லை. அதேபோல, ஆற்றுநீர் வீணாக கடலில் கலப்பதாகக் கூறுவதையும் ஏற்க முடியாது. ஆண்டுதோறும் ஆற்று நீர் கடலில் கலந்தால்தான் விளைநிலம் விளைநிலங்களாக இருக்கும். இல்லையெனில் கடல் நீர்புகுந்து உப்புத்தன்மை அதிகரித்துவிடும். 
காவிரியாறு கடந்த 50 ஆண்டுகளில் 70 சதவீதம் அழிந்துவிட்டது. அவ்வப்போது ஓடும் வெள்ளப்பெருக்கை அடிப்படையாகக் கொண்டு 40 சதவீதம் மட்டுமே அழிந்துவிட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த காவிரியை ஒப்பிட்டால் 70 சதவீதம் அழிந்துவிட்டது.
காவிரியை மீட்க வேளாண் காடுகள் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும். எனவேதான், காவிரி வடிநிலத்தில் 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நடும் இயக்கத்தை ஈஷா தொடங்கியுள்ளது. இதற்கு, கர்நாடக, தமிழக அரசுகளும், மத்திய அரசும் ஆதரவு அளித்துள்ளது என்றார்.
இத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை வளர்த்து தருவதாக தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT