பாஜகவை எதிர்ப்பதில் உறுதியாக இருப்போருக்கு இந்திய கம்யூ ஆதரவு: தா.பாண்டியன்
பாஜகவை எதிர்ப்பதில் யார் உறுதியாக இருக்கிறார்களோ அந்த கட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட், தமிழக மக்களின் முழுஆதரவு இருக்கும் என கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியன் சனிக்கிழமை தெரிவித்தார்.
பாஜகவை எதிர்ப்பதில் யார் உறுதியாக இருக்கிறார்களோ அந்த கட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட், தமிழக மக்களின் முழுஆதரவு இருக்கும் என கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியன் சனிக்கிழமை தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில் சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் இந்தியாவையும், வளங்களையும், மக்களையும் பாதுகாக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு தா.பாண்டியன் அளித்த பேட்டியில், “சுதந்திரப் போராட்டத்தில் அர்ப்பணிப்புடன், சுதந்திர வேட்கையுடன் போராடியது போன்று சுதந்திரத்தையும் அரசியலமைப்பு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமையில் இருக்கிறோம். உள்நாட்டில் சுதந்திரப் போராட்டகாலத்திலும் துரோகிகள் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். வெளிநாட்டு விரோதிகளை விட உள்நாட்டு துரோகிகள் ஆபத்தானவர்கள். நாட்டு மக்களை பிளவுபடுத்துவது, பிரிவுபடுத்துவது மற்றும் சுரண்டுவது, இழிவுபடுத்துவது என்றும் தங்கம், குட்கா, கஞ்சா என கடத்தலும் பொது முடக்க காலத்திலும் நடைபெறுகிறது.
கரோனாவைவிட இரண்டு (மனிதன்) கால் கரோனா முதல் எதிரி. அமெரிக்கா சுயநலம் என்ற பெயரால் பொருளாதார ரீதியில் இந்தியாவை அடிமைப்படுத்திவிட்டது. இதனை மோடி விடுவிக்கவேண்டும். கச்சா எண்ணெய் டாலரில் கொடுத்து வாங்கும்வரை நாம் மீளமுடியாது. ஒவ்வொருமுறை பெட்ரோல் டீசல் பிடிக்கும்போதும் முகேஷ்அம்பானிக்கு கப்பம் கட்டுகிறோம். அதிக அளவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காணப்படுவது இந்தியாவில் தான். இதனை முதலில் ரத்துசெய்யவேண்டும்.
முதலமைச்சர்கள் மாநாட்டில் இதற்கான முதல் குரல் எழுப்பிய பாராட்டுக்குரியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரை பின்பற்றும் எடப்பாடி ஒரு வார்த்தையும் கூறவில்லை. மாறாக வரியினை உயர்த்துகின்றனர். சட்டமன்றத்தேர்தலில் கட்சிகளை வைத்து சித்தாந்தம் செய்து வரும் பாஜகவை எதிர்ப்பதில் யார் உறுதியாக இருக்கிறார்களோ அந்த கட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட், தமிழக மக்களின் முழு ஆதரவு இருக்கும்.” என்று தெரிவித்தார்.