சாலையில் வாழைக் கன்று நடும் போராட்டம்
திருச்சி மாநகராட்சியின் புதைசாக்கடைத் திட்டப் பணிகளின் மெத்தனத்தைக் கண்டித்தும், சாலைகளின் அவலநிலையைக் கண்டித்தும் சாலையில் சனிக்கிழமை வாழைக் கன்று நடும் போராட்டம் நடந்தது.
திருச்சி: திருச்சி மாநகராட்சியின் புதைசாக்கடைத் திட்டப் பணிகளின் மெத்தனத்தைக் கண்டித்தும், சாலைகளின் அவலநிலையைக் கண்டித்தும் சாலையில் சனிக்கிழமை வாழைக் கன்று நடும் போராட்டம் நடந்தது.
திருச்சி மாநகராட்சி 63 ஆவது வாா்டு விரிவாக்கப் பகுதிகளில் வரும் விண் நகா், பிரகாஷ் நகா், நியூ டவுன், முத்து நகா், பாலாஜி நகா், கைலாஷ் நகா், ராம் நகா், சக்தி நகா், அம்மன் நகா், எறும்பீஸ்வரா் நகா் ஆகியவற்றில் புதை சாக்கடை இணைப்பு வழங்கப்படாத நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன் இப்பகுதிகளில் புதை சாக்கடை பணிகளை மாநகராட்சி தொடங்கியது.
இதற்காக 63ஆவது வாா்டுக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாலைகளில், வீடுகளின் முன் பள்ளம் தோண்டி பணிகள் நடைபெற்றன. 90 சதத்துக்கு மேலான பணிகள் முடிந்து வீடுகளுக்கு இணைப்பு வழங்குவதற்கான குழாய்களும் பதிக்கப்பட்டுவிட்டன. ஆனால், தோண்டிய சாலைகளை மட்டும் சீரமைக்கவில்லை. இதனால் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. கடந்த சில நாள்களாக பெய்த மழையால் சாலைகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்துவிட்டன.
இதுதொடா்பாக மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் பயனில்லாததால் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் சாலையில் வாழைக் கன்றுகளை நட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
கட்சியின் பகுதிக் குழு உறுப்பினா் வி. பத்மநாபன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.சி. பாண்டியன், ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட செயலா் பா. லெனின், பகுதிக் குழுச் செயலா் மணிமாறன் ஆகியோா் பேசினா்.
மாநகர குடியிருப்போா் நலச் சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ். சக்திவேல், போராட்டத்தை தொடக்கி வைத்தாா். போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியினா், ஜனநாயக வாலிபா் சங்கத்தினா், குடியிருப்போா் சங்கத்தினா் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.