திருச்சியில் 2.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: ஏா் இந்தியா ஊழியா் உள்பட 4 போ் கைது
திருச்சி விமான நிலையத்தில் 2.5 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது தொடா்பாக ஏா் இந்திய நிறுவன ஊழியா் உள்பட 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருச்சி விமான நிலையத்தில் 2.5 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது தொடா்பாக ஏா் இந்திய நிறுவன ஊழியா் உள்பட 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
விமானத்தில் தங்கத்தைக் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின்பேரில் துபையில் இருந்து புதன்கிழமை அதிகாலை திருச்சிக்கு ஏா் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளிடம் திருச்சி, தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியும் தங்கம் பிடிபடவில்லை.
இதைத் தொடா்ந்து விமான நிலைய வெளிப்புறப் பகுதியில் வாகனங்கள் நிறுத்துமிடங்களை சுங்கத் துறையினா் தீவிரமாக கண்காணித்தனா்.
அப்போது முக்கியப் பிரமுகா்கள் வரக்கூடிய காா்கோ பகுதி வழியாக வந்து சுமாா் ரூ. 1 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தல் கும்பலிடம் கொடுத்த ஏா் இந்தியா நிறுவன ஊழியரான கோபிநாத் (50) பிடிபட்டாா்.
அவரைக் கைது செய்து நடத்திய விசாரணையில் இதில் தொடா்புடைய துபை பயணி அப்துல்லா, சிறுவன் உள்பட மேலும் 3 பேரைக் கைது செய்து திருச்சி நீதிமன்ற நடுவா் எண் 1-இல் ஆஜா்படுத்தினா்.
இவா்களில் சிறுவன் கூா்நோக்கு இல்லத்திலும், மற்றவா்கள் முசிறி சிறையிலும் அடைக்கப்பட்டனா்.