திமுக முதன்மைச் செயலர் கே.என். நேரு மருத்துவமனையில் அனுமதி
திமுக முதன்மைச் செயலர் கே.என். நேருவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக முதன்மைச் செயலர் கே.என். நேருவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மேற்கு தொகுசி சட்டப் பேரவை உறுப்பினரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என். நேரு, திருச்சியில் கடந்த சில நாள்களாக சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையிலேயே கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். புதன்கிழமை திருச்சி, மண்ணச்சநல்லூர், லால்குடி சட்டப் பேரவை தொகுதிகளில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டங்களிலும் வலது கையில் ஊசி மருந்து ஏற்றுவதற்கான நீடில் இணைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பங்கேற்றார்.
இந்த நிலையில், சென்னைக்கு வெள்ளிக்கிழமை சென்ற அவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவியது. இதனை மறுத்து, தனது சுட்டுரை பக்கத்திலும், தனக்கு கரோனா இல்லை என்பதை குறிப்பிட்டுள்ளார். திருச்சி திமுக வட்டாரத்தினரும் கே.என். நேருவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக மட்டுமே தெரிவித்தார். கரோனா பதிப்பு இருப்பதாக கூறவில்லை.
இதுதொடர்பாக, திமுக முதன்மைச் செயலர் கே.என். நேருவின், சுட்டுரை பக்கத்தில் தெரிவித்திருப்பது: கடந்த இரண்டு நாட்களாக எனக்கு லேசான காய்ச்சல் இருந்தது. மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் என்னை ஓய்வில் இருக்கும்படி சொல்லி இருக்கிறார்கள். அதனால் நான் தனிமையில் ஓய்வில் இருக்கிறேன். இப்போது நலமாக இருக்கிறேன். என், உடல் நலன் மீது அக்கறை கொண்ட கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.