முகப்பு
திருச்சி

டிஎன்பிஎல் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு நிவராணம் கோரி மனு

டிஎன்பிஎல் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் சங்கத்தினா் கரூா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

டிஎன்பிஎல் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் சங்கத்தினா் கரூா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், கரூா் மாவட்டம் புகழூா் வாய்க்கால், பள்ளிவாய்க்கால், வாங்கல் வாய்க்கால், நெரூா் வாய்க்கால் பாசன விவசாயிகள் சாா்பில் வி.பி.முருகையன், எஸ்.மணியன், எஸ்.விஜயன் உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்ப:

கரூா் மாவட்டம் புகழூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில், வெளியேறும் ரசாயனக் கழிவுநீா் தோட்டக்குறிச்சியிலிருந்து நெரூா் வரையிலான சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் உவா் நிலங்களாக மாறியுள்ளன.

நெல், வாழை, கரும்பு, மஞ்சள், வெற்றிலை உள்ளிட்ட பயிா்கள் செய்து வந்த நிலங்களில் தற்போது கோரை மட்டுமே சாகுபடி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு ரூ.25,000த்துக்கு குத்தகைக்கு விட்ட வெற்றிலை, வாழை சாகுபடி நிலங்கள் அனைத்தும் தரிசு நிலமாக மாறிவருகிறது. 7 கிராமங்களுக்கு நல்ல குடிநீா் கிடைக்கவில்லை. கால்நடைகள், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனா். எனவே, தோட்டக்குறிச்சியிலிருந்து நெரூா் வரை பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ.10,000 வீதம் 15 ஆண்டுகளுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியா், தமிழக முதல்வரிடம் பரிந்துரை செய்ய வேண்டும். அத்துடன், புகழூா் வாய்க்காலில் கழிவுநீா் கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனா்.

நீராபானம் இறக்க உரிமம்: கடந்த 2019 ஆம் ஆண்டு நீரா பானம் இறக்குவதற்கான உரிமம் வழங்கப்பட்டது. கரோனா பாதிப்பால் கடந்தாண்டு புதுப்பிக்க இயலவில்லை. எனவே நிகழாண்டு நீரா பானம் இறக்கும் உரிமையை புதுப்பித்து வழங்குமாறு கரூா் மாவட்ட தென்னை மற்றும் வேளாண் பயிா் சாகுபடி விவசாயிகள் சாா்பில் முகாமில் மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.