முகப்பு
திருச்சி

துவரங்குறிச்சியில் மூதாட்டி கொலை

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் வீட்டில் தனியாக வசித்து வந்த ஹபிபாபீவி என்ற 62 வயது மூதாட்டி இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:10 PM
ஹபிபாபீவி(62).
பகிர்:

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் வீட்டில் தனியாக வசித்து வந்த ஹபிபாபீவி என்ற 62 வயது மூதாட்டி இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி சந்தைபேட்டையில் கணவரை இழந்து தனியாக வசித்து வந்தவர் அப்துல்ரசாக் மனைவி ஹபிபாபீவி(62). இவர் தவணையில் பெண்களுக்கான உடைகளை அப்பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளார். இன்று காலை குழாயில் குடிநீர் பிடிப்பதற்காக அக்கம்பக்கத்தினர் ஹபிபாபீவியை அழைத்தபோது, அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. 
மேலும் ஹபிபாபீவி இரத்த வெள்ளத்தில் ஆடைகள் முற்றிலும் களைந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா, துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் பாலாஜி ஆகியோர் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து மோப்ப நாய் ஸ்பார்க் நிகழ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டது. ஹபிபாபீவி வீட்டிலிருந்து வெளியே வந்த ஸ்பார்க் அப்பகுதியில் சந்து, சந்தாக ஓடி துவரங்குறிச்சி பிரதான சாலைக்கு சென்று பின் மீண்டும் ஹபிபாபீவி வீட்டில் நின்று விட்டது. 

இதனால் கொலையாளி அப்பகுதியினை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை தொடர்ந்துள்ளனர். மேலும் சடலம் அருகே இருந்து முகங்களை சிதைத்த கருங்கற்கள், பிளேடு, நைலான் கயிறு, கத்தி ஆகியவற்றை தடய அறிவியல் நிபுணர்கள் சேகரித்துள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை போலீஸார் சேகரித்து வருகின்றனர். 
மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்ததாக கூறப்படும் செயின் தவிர மற்ற வளையல்கள், மோதிரம், காதில் தோடு ஆகியவை இருக்கும்போது, கொலைக்கான காரணம் என்ன? தொழில் முன்விரோதம் உள்ளதா அல்லது மூதாட்டி சேகரித்து வைத்த பணத்தினை கைப்பற்றும் நோக்கத்தில் நடைபெற்ற கொலையா? என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகிறது. 
மூதாட்டி உடல் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூராய்விற்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. மிகவும் நெருக்கமான குடியிருப்புப் பகுதியான சந்தைபேட்டையில் மூதாட்டி கொலையுண்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →