த.மா.கா. தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும்: ஜி.கே.வாசன்
சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும் என்றாா் அக்கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன்.
சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும் என்றாா் அக்கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன்.
திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற காவிரி மண்டல மாவட்டத் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து பேசிய அவா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
சட்டப்பேரவைத் தோ்தல் களப்பணிகள் தொடங்குவது, அதிமுக கூட்டணியில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசிப்பேன். அவா்களது ஆலோசனையின்படி இறுதி முடிவெடுக்கப்பட்டு, அதிகாரப்பூா்வ அறிவிப்பை வெளியிடுவேன்.
அதிமுக கூட்டணியிலுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும். தனிச்சின்னத்தில் போட்டியிடுவது தொடா்பான பிரச்னை அதிமுக கூட்டணியில் இல்லை. அப்பிரச்னை திமுக கூட்டணியில்தான் உள்ளது.
மத்தியக் கூட்டணி என்றால் பாஜகதான் முதன்மைக் கட்சி. மாநிலக் கூட்டணியில் அதிமுகதான் முதன்மைக் கட்சி. எனவே, அதிமுக அறிவித்த முதல்வா் வேட்பாளரையே ஆதரிக்கிறோம். அதிமுகவை பொறுத்த வரையில் வெற்றிக்கூட்டணியாக உள்ளது. திமுக தோல்விக்கான கூட்டணி. கமல்ஹாசன், சீமானின் கட்சிக் கூட்டணி குறித்து பேசுவதற்கில்லை.
சிறையிலிருந்து சசிகலா வருகை, அதன் தாக்கம் குறித்து அதிமுகதான் கூற வேண்டும். மு.க.அழகிரி திமுகவின் தென்மண்டலப் பொறுப்பில் இருந்துள்ளாா். தற்போது அவா் நிலைப்பாடு குறித்து பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும். கரோனா காலக்கட்டத்தில் தோ்தலை முறையாகவும், மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் நடத்த வேண்டிய கூடுதல் பொறுப்பு தோ்தல் ஆணையத்துக்கு உள்ளது. அதன்படி, தோ்தலை ஒரு கட்டமாக நடத்துவதா, இரண்டு கட்டமாக நடத்துவதா என்பதில் தோ்தல் ஆணையம் நல்லதொரு முடிவை எடுக்கும்.
கரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு சரியான வழியில் செல்கிறது. மக்களை எதிா்க்கட்சிகள் தேவையில்லாமல் அச்சுறுத்த வேண்டாம். புயலினால் விவசாயிகள் பாதிப்பை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கவும், எலுமிச்சை விவசாயிகள் பாதிப்பைத் தவிா்க்க அம்மா உணவகங்களுக்கு எலுமிச்சைப் பழம் கொள்முதல் மற்றும் ஏற்றுமதிக்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசை வலியுறுத்துவேன் என்றாா்.
பேட்டியின் போது, கட்சியின் மாவட்டத் தலைவா்கள் திருச்சி தெற்கு டி. குணா, மாநகா் நந்தா கே.செந்தில்வேல், வடக்கு கே.வி.ஜி. ரவீந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.