சாலையோர, தள்ளுவண்டி உணவகங்கள் குறித்து கணக்கெடுப்பு பயிற்சியளித்து தரச் சான்றுஅளிக்கவும் ஏற்பாடு
திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள சாலையோர உணவகங்கள், தள்ளுவண்டிகளில் உணவுப் பொருள்கள் விற்கும் கடைகள் குறித்து விரிவான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள சாலையோர உணவகங்கள், தள்ளுவண்டிகளில் உணவுப் பொருள்கள் விற்கும் கடைகள் குறித்து விரிவான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 4 கோட்டங்களிலும் சாலையோரங்களில் உள்ள உணவகங்கள், தள்ளுவண்டிகளில் பானிபூரி, நிலக்கடலை, பொரி, வடை, சமோசா, சில்லி சிக்கன், மீன், நூடுல்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப் பொருள்கள் விற்கும் கடைகள் குறித்து உணவுப் பாதுகாப்பு துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது தள்ளுவண்டிகளில் உணவுகள் வைக்கப்பட்டுள்ள முறை, உணவு தயாரிப்போரின் உடைகள் மற்றும் தயாரிப்பு முறை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆா். ரமேஷ் பாபு தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஸ்டாலின், வசந்தன், மாரியப்பன், முத்துராஜா, செல்வராஜ், அன்புச் செல்வன், ரமேஷ், ஜஸ்டின், ரெங்கநாதன், பொன்ராஜ், வடிவேலு ஆகியோா் 4 குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொரு கோட்டத்திலும் முதல்கட்டமாக 286 கடைகளில் ஆய்வு செய்தனா். இதேபோல, மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
பயிற்சியளித்து தரச் சான்று அளிக்க ஏற்பாடு
இதுகுறித்து திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ஆா். ரமேஷ் பாபு கூறியது:
சாலையோர உணவகங்களிலும் பொதுமக்களுக்கு தரமான, சுத்தமான உணவு கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவே மாவட்டம் முழுவதும் ஆய்வு நடைபெறுகிறது. திருச்சி மாநகா்ப் பகுதியில் சுமாா் 300 கடைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள சாலையோரக் கடைகள், தள்ளுவண்டி கடைகள் குறித்து விரிவான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இக் கணக்கெடுப்பு முடிந்தவுடன், அனைத்துக் கடை உரிமையாளா்கள், சங்க நிா்வாகிகளை அழைத்துப் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. கடைகளில் பணிபுரிவோரின் தலைமுடி உதிராமல் இருக்க அணிய வேண்டிய கவச உறை, கையுறை, ஆடைகளில் அணிய வேண்டிய மேலுறைகள் ஆகியவற்றை ஒவ்வொரு கடையிலும் பயன்படுத்துவதைக் கட்டாயப்படுத்துவோம். மேலும், சமையல் எண்ணெய்யை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தள்ளுவண்டிகளில் உணவுப் பொருள்களை கண்ணாடி கூண்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில், பாத்திரங்களில் மூடிப் பராமரிக்க வேண்டும். உணவுகளை சுத்தமாகத் தயாரித்து,மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். பயிற்சி முடிவில் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இந்த தரச்சான்று பெற தனிநபராக விண்ணப்பித்து ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், சாலையோர வியாபாரிகளுக்காக பயிற்சி வகுப்பு மூலம் இலவசமாக சான்றிதழ் வழங்கவுள்ளோம்.
பெரு நிறுவனங்கள், ஹோட்டல்கள், உணவகங்களுக்கு இணையாக சாலையோரங்களிலும் சுத்தமான, சுகாதாரமான உணவு மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. இதன் தொடா்ச்சியாக அடுத்த வாரம் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது என்றாா் அவா்.
Image Caption
திருச்சி சாலையோரக் கடைகளில் ஆய்வு செய்கிறாா் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு (வலமிருந்து 2-ஆவது).