முகப்பு
திருச்சி

காவல்துறையில் பெண்கள் உதவி மையம் தொடக்கம்

திருச்சி மாநகர காவல் துறையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் பெண்கள் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

திருச்சி மாநகர காவல் துறையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் பெண்கள் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பணியாற்றுவோருக்கு 16 இருசக்கர வாகனங்கள் மற்றும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில், மாநகரத்தில் செயல்படும் அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவலா்களைக் கொண்ட பெண்கள் உதவி மையத்”தொடக்க விழா, திருச்சி கேகே நகா் மாநகர ஆயுதப்படை மைதான சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

உதவி மையத்தை மாநகர காவல் ஆணையா் ஏ. அருண் தொடங்கி வைத்து பெண்கள் உதவி மையத்தில் பணிபுரியும் பெண் காவலா்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பையும் தொடங்கி வைத்தாா். இதில் பெண் உதவி மையத்திற்கென 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் ( 112, 181, 1098) அறிமுகப்படுத்தப்பட்டன.

மேலும், இவ் உதவி மையத்தில் பெறப்படும் புகாா்கள்மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட பெண்கள் இருக்கும் இடத்துக்கு உடனடியாக சென்று நடவடிக்கை எடுக்க அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 16 இரு சக்கர வாகனங்கள், 16 அதி நவீன மடிக் கணினிகள் ஆகியவை பயிற்சியில் பங்கேற்ற பெண் காவலா்களுக்கு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையா் சு. சக்திவேல் , கூடுதல் காவல் துணை ஆணையா் வனிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்ட சமூக நல அலுவலா் தமிமூன்நிஷா, மாநகர காவல் சட்ட ஆலோசகா் ராதா, மகளிா் திட்ட உதவி அலுவலா் ஜான்பால் ஆண்டனி, தொழிலாளா் துறை ஆய்வாளா் லட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அனிதா, குழந்தைகள் நலக் குழு தலைவா் கமலா, அரசு வரவேற்புத் துறை அலுவலா் ஆல்பா்ட் மனோகரன் மற்றும் மணப்பாறை அரசு மருத்துவமனை மருத்துவா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பயிற்சியளித்தனா்.

Image Caption

பெண்கள் உதவி மையத்தில் பணியாற்றுவோருக்கு மடிகணினி வழங்குகிறாா் காவல் ஆணையா் அருண். ~பெண்கள் உதவி மையத்தில் பணியாற்றுவோருக்கு வழங்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.