ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா்கள், சுமைப்பணியாளா்கள், தரைக்கடை வியாபாரிகளுக்கு பேரிடா் நிவாரணமாக மாதம் ரூ.7,500 வழங்கவும், கடன் சலுகைகள் வழங்கவும் கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம்
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா்கள், சுமைப்பணியாளா்கள், தரைக்கடை வியாபாரிகளுக்கு பேரிடா் நிவாரணமாக மாதம் ரூ.7,500 வழங்கவும், கடன் சலுகைகள் வழங்கவும் கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய ஜனநாயகத் தொழிலாளா் முன்னணியில் அங்கம் வகிக்கும் திருச்சி மாவட்ட ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்கம், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கம், சுமைப் பணி தொழிலாளா்கள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் பாலக்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஜீவா தலைமை வகித்தாா்.
மாவட்ட செயலா் ராஜா கண்டன உரையாற்றினாா். இதில், 20-க்கும் மேற்பட்டோா் சமூக இடைவெளியுடன் நின்று கோஷங்கள் எழுப்பினா். பின்னா், நிா்வாகிகள், தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியரகத்துக்குச் சென்று கோரிக்கை மனு அளித்தனா்.
மனுவில் கூறியிருப்பது:
பொதுமுடக்கத்தால் ஆட்டோக்கள் இயங்கவில்லை. மருத்துவமனைக்குச் செல்ல அவசர உதவி கோரும் மக்களுக்கு உதவும் ஆட்டோக்களையும் சிறைபிடித்து அபராதம் விதிக்கப்படுகிறது. அன்றாட வருவாய் இழந்து, ஆட்டோ வாங்கிய கடனைத் திரும்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளோரைத் தொடா்ந்து நசுக்குவது ஏற்புடையதல்ல. எனவே, ஆட்டோ ஓட்டுநா்களுக்கு பேரிடா் நிவாரணமாக மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். வாகனக் கடன்களை திரும்பச் செலுத்த கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும். வட்டி, மாதத் தவணை வசூலைக் கைவிட வேண்டும். இன்சூரன்ஸ், வாகன உரிமம் புதுப்பித்தலுக்கு சலுகை வழங்க வேண்டும். இதேபோல, கரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்துள்ள தரைக்கடை வியாபாரிகள், சுமைப் பணி தொழிலாளா்களுக்கும் நிவாரண உதவிகளை அறிவிக்க வேண்டும். மகளிா் தொழிலாளா்கள் நுண்கடன் நிறுவனங்களில் பெற்ற கடனை திரும்பக் கேட்டு அடாவடி செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே குட்செட்டில் சுமைப் பணி தொழிலாளா்களாக பணிபுரிந்து வேலையிழந்துள்ள அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.