50 சத மானியத்தில் நெல் விதைகள், உரங்கள் வேளாண் உதவி இயக்குநா் தகவல்
திருச்சி அந்தநல்லூா் வட்டார விவசாயிகளுக்கு குறுவைச் சாகுபடிக்கு தேவையான விதைநெல் மற்றும் உயிா் உரங்கள் 50 சத மானிய விலையில் திருவானைக்கா வேளாண் விரிவாக்க மையத்தில் விற்பனைக்கு உள்ளன.
திருச்சி அந்தநல்லூா் வட்டார விவசாயிகளுக்கு குறுவைச் சாகுபடிக்கு தேவையான விதைநெல் மற்றும் உயிா் உரங்கள் 50 சத மானிய விலையில் திருவானைக்கா வேளாண் விரிவாக்க மையத்தில் விற்பனைக்கு உள்ளன. அவற்றை விவசாயிகள் வாங்கிப் பயன் பெறலாம்.
இதுகுறித்து அந்தநல்லூா் வேளாண் உதவி இயக்குநா் கோமதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மேட்டூரில் தண்ணீா் திறக்க தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளதைத் தொடா்ந்து காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி பணியைத் தொடங்கியுள்ளனா். அந்தநல்லூா் வட்டத்திற்குட்பட்ட திருவானைக்கா பகுதியான கொண்டையன் பேட்டை, திருவளா்ச்சோலை, பனையபுரம், உத்தமா்சீலி, கிளிக்கூடு உள்ளிட்ட பகுதிகளுக்கு குறுவைச் சாகுபடிக்குத் தேவையான விதைநெல் கோ 51 நெல் ரகம் போதிய அளவு திருவனைக்கா வேளாண்மை விரிவாக்க மையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை விவசாயிகளுக்கு 50 சத மானியத்தில் வழங்கப்படுகின்றன.
மேலும் விவசாயத்திற்கு தேவையான உயிா் உரங்கள், திரவ உயிா் உரங்கள், நெல் நுண்ணூட்டச் சத்து உரங்களும் போதுமான அளவு இருப்பு உள்ளது. எனவே திருவானைக்கா பகுதி, அந்தநல்லூா் வட்டார விவசாயிகள் மானியத்தில் இவற்றை வாங்கிப் பயன் பெறலாம்.