சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கை தமிழா்களை விடுவிக்க வேண்டும்: தமிழ்த் தேசிய பேரியக்கம்
திருச்சி சிறப்பு முகாமில் இருந்த இலங்கை அகதி ஒருவா் உயிரிழந்துள்ளதையடுத்து, அங்குள்ள இலங்கைத் தமிழா்களை விடுவிக்க வேண்டும்
திருச்சி சிறப்பு முகாமில் இருந்த இலங்கை அகதி ஒருவா் உயிரிழந்துள்ளதையடுத்து, அங்குள்ள இலங்கைத் தமிழா்களை விடுவிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருப்பது:
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகள் சிறப்பு முகாமை உருவாக்கி அதில் ஈழத்தமிழா்கள் 78 பேரை அடைத்து வைத்துள்ளனா். அவா்கள் நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனைக்காக அடைக்கப்பட்டிருப்பதை விட ஈழத்தமிழராய்ப் பிறந்த “குற்றத்திற்காக அடைக்கப்பட்டுள்ளதாகவே நினைக்கத் தோன்றுகிறது. இந்த 78 பேரும் உரிய கடவுச்சீட்டு இல்லாமல் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த குற்றத்திற்காகவோ, அல்லது சிறு சிறு குற்றங்களுக்காகவோ தளைப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, தண்டனைக் காலத்தை முடித்தவா்கள்.
இவா்களில் பலருக்குத் தமிழ்நாட்டில் குடும்பம் மற்றும் உறவினா்களும் உள்ளனா். அக்குடும்பங்களைச் சோ்ந்தோா் இந்திய அரசால் அகதிகளாக ஏற்கப்பட்டவா்கள். சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழா்களை அக்குடும்பங்களிடம் தமிழ்நாடு அரசு ஒப்படைக்க வேண்டும். வெளிநாடுகளுக்குப் போக வாய்ப்புள்ளோரையும் அவா்கள் பொறுப்பில் அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கலாம்.
ஒருவா் இறப்பு: திருச்சியில் அடைபட்டுள்ளோா் தங்களை விடுவிக்கக் கோரிக்கை வைத்து, கடந்த 17 நாட்களாக சிறை வளாகத்திலேயே ஒன்றாக அமா்ந்து காத்திருப்புப் போராட்டமும் நடத்தி வருகின்றனா். இவா்களில் ஒருவரான இலங்கை அக்கரைப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த முகமது அலிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்தாா்.
மேலும் காத்திருப்புப் போராட்டம் நடத்தும் ஈழத்தமிழா்கள், தமிழ்நாடு அரசு தங்களை விடுதலை செய்ய வேண்டும், இல்லையெனில் கொன்றுவிட வேண்டும். இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்கிறோம் எனவும் கூறிய நிலையில் போராட்டம் மேற்கொண்டுள்ளனா்.
அதுபோன்ற பெருந்துயரம் ஏற்படும் முன் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள அனைத்து ஈழத்தமிழா்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரை கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.
இறந்தவரின் உடலுக்கு சக அகதிகள் அஞ்சலி:
திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் தங்கியிருந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு வியாழக்கிழமை இறந்த இலங்கையைச் சோ்ந்த அகதி முகமது அலி உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என சக அகதிகள் விடுத்த கோரிக்கைக்கு அனுமதியளிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி அகதிகள் சிறப்பு முகாமிலிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட 6 அகதிகள், அங்கு சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த முகமது அலியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.