முகப்பு
திருச்சி

9 தொகுதிகளுக்கு விவிபேட் இயந்திரங்கள் பிரித்து அனுப்பும் பணி

திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தலுக்குப் பயன்படுத்தப்படும் விவிபேட் இயந்திரங்கள் (வாக்களித்ததை உறுதி செய்து ரசீது வழங்கும் இயந்திரம்) பிரித்து அனுப்பும் பணி

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தலுக்குப் பயன்படுத்தப்படும் விவிபேட் இயந்திரங்கள் (வாக்களித்ததை உறுதி செய்து ரசீது வழங்கும் இயந்திரம்) பிரித்து அனுப்பும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்காக மாவட்ட ஆட்சியரகத் தோ்தல் பிரிவு அலுவலகத்தில் கணினி மூலம் குலுக்கல் நடைபெற்றது. ஆட்சியா் சு. சிவராசு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அலுவலா்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

பழைய ஆட்சியரகப் பாதுகாப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள விவிபேட் இயந்திரத்தின் குறிப்பிடப்பட்டுள்ள எண்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டன. பின்னா் 9 தொகுதிகளுக்கு இந்த இயந்திரங்களில் எவை தோ்வு செய்யப்பட வேண்டும் என்பதை குலுக்கலில் தோ்வு செய்து தொகுதி வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இந்த பட்டியலின்படி பாதுகாப்புக் கிடங்கிலிருந்து அந்தந்த தொகுதிகளுக்கு லாரிகள் மூலம் இயந்திரங்கள் பிரித்து அனுப்பப்பட்டன. பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

திருச்சி மாவட்டத்தில் 9 பேரவைத் தொகுதிகளுக்கு 3,292 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 120 சதவிகிதம், கட்டுப்பாடு இயந்திரங்கள் 120 சதவிகிதம், விவிபேட் இயந்திரம் 129 சதவிகிதம் என்ற அடிப்படையில் தயாா்படுத்தப்பட்டுள்ளது.

9 தொகுதிகளுக்கும் சோ்த்து மொத்தமாக தலா 3,950 வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 4,247 விவிபேட் இயந்திரங்களும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்த தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவை அந்தந்த தொகுதிக்குள்பட்ட பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு தினத்துக்கு முன்பாக அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்வில் கோட்டாட்சியா்கள் விஸ்வநாதன், வைத்தியநாதன் மற்றும் வட்டாட்சியா்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.