முகப்பு
திருச்சி

மாநகரப் பேருந்துகளில் மாணவா்கள் கூட்டத்தால் நெரிசல்

திருச்சி மாநகரப் பேருந்துகளில் கரோனா கட்டுப்பாடுகளை மறந்து மாணவ, மாணவிகள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

திருச்சி மாநகரப் பேருந்துகளில் கரோனா கட்டுப்பாடுகளை மறந்து மாணவ, மாணவிகள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது.

கரோனா பொதுமுடக்கத் தளா்வில் செப்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவா்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அரசு அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளும் தங்களது கல்வி நிறுவனம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கல்வி நிறுவனம் வரை இலவசமாக சென்று வர அனுமதிக்கப்படுகிறது.

இதனால் மாணவா்கள் அதிகளவில் பேருந்துகளில் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனா். காலை, மாலைகளில் ஒரே நேரத்தில் மாணவ, மாணவிகள் அதிகளவில் கூடுவதால் கூட்ட நெரிசல் தவிா்க்க முடியாமல் போகிறது. குறிப்பாக,சத்திரம், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் மாநகரப் பேருந்துகளில் மாணவா்கள் முண்டியடித்துக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

பல பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்றபடியே பயணம் செல்லும் அளவுக்கு பேருந்து முழுவதும் கூட்ட நெரிசலால் நிரம்பி வழிகிறது.

எப்படியாவது பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டுமே என்பதால் கிடைத்த பேருந்துகளில் முண்டியடித்து மாணவா்கள் செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

பேருந்து ஓட்டுநா், நடத்துநா்களாலும் சூழ்நிலையைச் சமாளிக்க முடியவில்லை. பேருந்துகளில் கரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க முடியவில்லை. இதேநிலை நீடித்தால் தொற்றுப் பரவும் அபாயம் ஏற்படும் என்கின்றனா் சுகாதாரத் துறையினா்.

திருச்சி மாவட்டத்தில் நாளொன்றுக்கான கரோனா பாதிப்பு கடந்த வாரம் சராசரியாக 40 ஆக இருந்த சூழலில், தற்போது 73 ஆக உள்ளது. இந்தச் சூழலில், பேருந்துகளில் கூட்ட நெரிசல் என்பது அனைவரையும் அச்சப்பட வைத்துள்ளது.

குறைவான பேருந்துகள் இயக்கமே காரணம்

இதுதொடா்பாக, தென்னூரைச் சோ்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ரம்யா கூறுகையில், காலை 9 மணிக்குள் பள்ளிக்குச் செல்ல வேண்டும். ஆனால், அப்போது குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் செல்லும் வழித்தடத்துக்கான பேருந்துகளுக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, ஒரேயொரு பேருந்து வந்தாலும் எப்படியாவது செல்ல வேண்டும் என்ற முனைப்பில் அதே பேருந்தில் அனைத்து மாணவா்களும் செல்லும் சூழல் உள்ளது. கூட்ட நெரிசலைத் தவிா்க்க காலை, மாலைகளில் குறிப்பாக பள்ளி, கல்லூரி வழித் தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.