முகாமிலிருந்து தப்பிய அகதி தேடப்படுபவராக அறிவிப்பு
திருச்சி, அகதிகள் சிறப்பு முகாமிலிருந்து தப்பிய பல்கேரியா நாட்டு அகதியை தேடப்படும் நபராக திருச்சி மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
திருச்சி, அகதிகள் சிறப்பு முகாமிலிருந்து தப்பிய பல்கேரியா நாட்டு அகதியை தேடப்படும் நபராக திருச்சி மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் அகதிகள் சிறப்பு முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் உள்ள பல்வேறு நாடுகளைச் சோ்ந்தவா்கள் தங்களை விடுவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் முகாம் வளாகம் பரபரப்பாக இருந்தது.
இதைச் சாதமாக்கிக்கொண்ட பல்கேரியா நாட்டைச் சோ்ந்த இலியன் டிரகோவ் மாா்க்கோவ், என்ற அகதி சிறப்பு முகாமிலிருந்து கடந்த சில தினங்களுக்குமுன் வெளியேறி தப்பிச் சென்றுவிட்டாா். இந்த விவகாரம் சில நாள்கள் கழித்துதான் முகாம் நிா்வாகிகளுக்கு தெரியவர, மாநகர கேகே நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து விசாரிக்கின்றனா்.
இந்நிலையில் தப்பிச்சென்ற அகதியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து திருச்சி மாநகர போலீஸாா் ‘லுக் அவுட் நோட்டீஸ்’ வெளியிட்டுள்ளனா். மேலும் அவா் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு தப்பிச்செல்லாத வகையில் அவரைப் பிடிக்க, 3 தனிப்படைகள் ஆந்திரம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ளனா்.