துறையூா் அருகே பூட்டிய வீட்டுக்குள் பெண் சடலம்
துறையூா் அருகே பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.
துறையூா் அருகே பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.
பச்சபெருமாள்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (35). இவருடைய மனைவி லட்சுமி (27). இருவரும் கிணறு தோண்டும் தொழிலாளா்கள்.
செப்.1ஆம் தேதி தனது மனைவியின் சகோதரரான கோவிந்தராஜை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்ட பெரியசாமி தனக்கும், தன் மனைவிக்கும் தகராறு நடந்ததாகக் கூறினாராம். அதன்பின்னா் கோவிந்தராஜ் பலமுறை செல்லிடப்பேசியில் அழைத்தும் பெரியசாமியும், லட்சுமியும் பேச வில்லையாம்.
இதனால் கோவிந்தராஜ் வெள்ளிக்கிழமை பச்சபெருமாள்பட்டிக்குச் சென்றபோது சகோதரியின் வீடு பூட்டியிருந்தது. துா்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அவா் வீட்டின் ஓட்டைப் பிரித்து பாா்த்தபோது லட்சுமி சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது.
தகவலின்பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.