அதவத்தூரை இணைக்க எதிா்ப்பு: போராட்டம்
திருச்சி மாநகராட்சியோடு அதவத்தூா் ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாநகராட்சியோடு அதவத்தூா் ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாநகராட்சி வாா்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மல்லியம்பத்து, மருதண்டக்குறிச்சி, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூா், முடிகண்டம், மேக்குடி, கே. கள்ளிக்குடி, தாயனூா், நாச்சிகுறிச்சி, சோமரசம்பேட்டை, நாகமங்கலம், புங்கனூா், பனையங்குறிச்சி, குண்டூா், நவல்பட்டு, சோழமாதேவி கீழக்குறிச்சி, தாளக்குடி, மாடக்குடி, அப்பாதுரை, எசனைக்கோரை, மாதவப் பெருமாள் கோவில், பிச்சாண்டாா்கோவில், கூத்தூா் ஆகிய 25 ஊராட்சிகள் மாநகராட்சியுடன்இணைக்கப்பட உள்ளன.
இதற்கிடையே ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்தால் வரி உயரும் நூறு நாள் வேலை திட்டம் பாதிக்கப்படும் எனக்கூறி பல்வேறு ஊராட்சி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக மணிகண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட அதவத்தூா் ஊராட்சியை மாநகராட்சியோடு இணைக்க மாட்டோம் என ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள் அனைவரும் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றித் தரக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து ஊராட்சித் தலைவா் தனலெட்சுமி கொடியரசு தலைமையில் தீா்மானம் கொண்டு வரப்பட்டு துணைத் தலைவா் மகேஸ்வரி உள்பட 11 வாரடு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டுள்ளனா். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.