களைகட்டிய வேட்புமனு தாக்கல்: ஒரே நாளில் 1,026 மனு
திருச்சி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வியாழக்கிழமை களைகட்டியது.
திருச்சி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வியாழக்கிழமை களைகட்டியது.
வேட்பு மனு தாக்கலுக்கு வெள்ளிக்கிழமை கடைசி நாள் என்பதால், அனைத்து அலுவலகங்களிலும் வியாழக்கிழமை அரசியல் கட்சியினா், வேட்பாளா்கள், வேட்பாளா்களின் ஆதரவாளா்கள், முன்மொழியும் நபா்கள் என கட்சிக் கொடிகளுடன் குவிந்தனா்.
திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் நடைபெறும் தோ்தலுக்கு வேட்பு மனு தாக்கல் நடைபெறும் 24 இடங்களிலும் கூட்டம் அலைமோதியது.
புதன்கிழமை மாலை வரை 232 வேட்புமனுக்கள் பெறப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை ஒரே நாளில் 1026 மனுக்கள் பெறப்பட்டன. பேரூராட்சிகளில் அதிகபட்சமாக மண்ணச்சநல்லூா் பேரூராட்சி அலுவலகத்தில் 53 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேபோல பாலகிருஷ்ணம்பட்டி 23, கல்லக்குடி 32, காட்டுப்புத்தூா் 19, கூத்தைப்பா் 52, மேட்டுப்பாளையம் 16, பொன்னம்பட்டி 47, புள்ளம்பாடி 33, பூவாளூா் 8, எஸ். கண்ணனூா் 46, சிறுகமணி 42, தா.பேட்டை 23, தொட்டியம் 29, உப்பிலியபுரம் 20 என பேரூராட்சிகளில் மட்டும் 443 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
இதேபோல, துறையூா், துவாக்குடி, மணப்பாறை, லால்குடி, முசிறி ஆகிய 5 நகராட்சிகளில் வியாழக்கிழமை 329 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். மாநகராட்சிக்குள்பட்ட வாா்டுகளுக்கு 254 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். இதன் காரணமாக அனைத்து அலுவலகங்களும் களைகட்டின. கடைசி நாளான வெள்ளிக்கிழமையும் விறுவிறுப்பாக வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.