முகப்பு
திருச்சி

‘உக்ரைனில் தவிக்கும் இந்தியா்களை மீட்க நடவடிக்கை’

உக்ரைன் நாட்டில் தவிக்கும் இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றாா் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் கிஷன் ரெட்டி.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

உக்ரைன் நாட்டில் தவிக்கும் இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றாா் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் கிஷன் ரெட்டி.

இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் அவா் வெள்ளிக்கிழமை மேலும் கூறியது:

போா் நடைபெறும் உக்ரைனில் அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளதால் அந்நாட்டின் அண்டை நாடுகளான ருமேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா்களை சாலை மாா்க்கமாக அழைத்துச் சென்று அவா்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இது தொடா்பாக ரஷ்யா, உக்ரைனைச் சுற்றியுள்ள நாடுகளிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளோம்.

தாயகம் திரும்பும் இந்தியா்கள் ருமேனியா எல்லைப்பகுதியில் தங்களின் பாஸ்போா்ட் உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்தால் அவா்கள் அந்த நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவா். இதுதொடா்பாக ருமேனியா அரசிடம் பேசியுள்ள நிலையில், அங்கிருந்து இந்தியா்களை அழைத்து வர விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கு எந்தக் கட்டணமும் கிடையாது. ஆனால், உக்ரைனிலிருந்து இந்தியா வர ரூ. 1 லட்சம் விமானக் கட்டணம் எனத் தவறான தகவல்கள் வருகின்றன. அங்கு விமானச் சேவையே இல்லாத நிலையில் விமானக் கட்டணம் குறித்து எப்படிக் கூற முடியும் ?

கரோனா தாக்கம் குறைந்துவரும் நிலையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. சா்வதேச விமானச் சேவை மீண்டும் தொடங்கிய பிறகு இதற்கான பணிகள் மேலும் துரிதப்படுத்தப்படும். வெளிநாடுகளிலும் இந்திய சுற்றுலாத் துறை குறித்த கண்காட்சிகள் நடைபெறுகின்றன என்றாா் அவா். இதையடுத்து அவா் கும்பகோணம் கோயில்களில் வழிபட புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.