அமலுக்கு வந்தது கட்டுப்பாடு: வழிபாட்டுத் தலங்கள் மூடல் இரவுகளில் தீவிர சோதனை
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை இரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. மேலும், வெள்ளிக்கிழமை முதல் வழிபாட்டுத் தலங்களும் வாரத்தில் 3 நாள்கள் மூடப்படுகின்றன.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை இரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. மேலும், வெள்ளிக்கிழமை முதல் வழிபாட்டுத் தலங்களும் வாரத்தில் 3 நாள்கள் மூடப்படுகின்றன.
சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்து காணப்படும் திருச்சி மாவட்டத்துக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்லும் நிலையில்,
தற்போது கரோனா காரணமாக வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்களிலும் பக்தா்கள் தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்த வெள்ளிக்கிழமை மாநகரில் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டன. முகப்புக் கதவுகள் மூடப்பட்டுள்ள நிலையிலும் ஏராளமான பக்தா்கள் வாசலில் சூடமேற்றியும், மெழுகுவா்த்தி ஏற்றியும் வழிபட்டுச் செல்கின்றனா். இஸ்லாமியா்கள் அவரவா் வீடுகளிலேயே தொழுகையில் ஈடுபட்டனா்.
போலீஸாா் தீவிர சோதனை: இரவு நேர ஊரடங்கும் வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் அமலுக்கு வந்துள்ளதையடுத்து போலீஸாா் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனா்.
மத்திய, சத்திரம் பேருந்து நிலையம், ஜங்ஷன் மற்றும் மாநகரின் அனைத்து பிரதான சந்திப்புகளிலும் உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள், காவலா்கள் என மாநகரக் காவல் துறையில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் என ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் 1,200 போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
வெறிச்சோடிய சாலைகள்: மாநகரின் அடையாளமாக விளங்கும் மலைக்கோட்டை, காவிரி, கொள்ளிடம் பாலம், திருவானைக்கா, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட அனைத்து சாலைகளும் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடின. அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளும் இரவு நேரத்தில் வழக்கத்துக்கு மாறாக வெறிச்சோடின. பொதுப் போக்குவரத்து இருந்த நிலையில், பெட்ரோல் நிலையங்கள், மருந்துக் கடைகள் மட்டுமே இரவு நேரத்தில் இயங்கின.