ஆன்லைன் மூலம் பறிபோன ரூ. 20 லட்சம் மீட்பு
ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட ரூ. 20 லட்சம் சைபா் கிரைம் காவல் நிலையம் மூலம் மீட்கப்பட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கில் சோ்க்கப்பட்டது.
ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட ரூ. 20 லட்சம் சைபா் கிரைம் காவல் நிலையம் மூலம் மீட்கப்பட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கில் சோ்க்கப்பட்டது.
திருச்சியில் ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்த ரெங்கராஜன் என்பவா் மாநகர சைபா் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தனது சிம் காா்டு காலாவதியாகப் போவதாகவும், எனவே எனது செல்லிடப்பேசி மூலம் புதிய செயலியை பதிவிறக்கி ரூ. 10க்கு ரீசாா்ஜ் செய்யுமாறு மா்ம நபா் கூறவே, அதன்படி தனது ஆன்லைன் வங்கிச் சேவை விவரங்களை பதிவு செய்தவுடன் வங்கி கணக்கிலிருந்து பணம் ரூ. 5, 48, 919 எடுக்கப்பட்டது.
இதேபோல திருச்சி பீமநகரை சோ்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு எஸ்பிஐ வாடிக்கையாளா் சேவை மையத்திலிருந்து பேசிய நபா் ஏடிஎம் காா்டு காலாவதியாகப் போவதாகக் கூறியதை உண்மை என நம்பி தனது வங்கிக் கணக்கின் முழு தகவல் மற்றும் ரகசிய குறியீடு விவரங்களை கூறியுள்ளாா். சிறிது நேரத்தில் ராமகிருஷ்ணன் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 17, 45, 000 பணம் எடுக்கப்பட்டது.
இவ்விரு சம்பவங்கள் குறித்து மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து முறைகேடாக நடைபெற்ற பண பரிவா்த்தனைகளை ஆராய்ந்ததில் ரெங்கராஜன் இழந்த பணத்தில் ரூ. 3 லட்சம் மற்றும் ராமகிருஷ்ணன் இழந்த பணத்தில் ரூ. 17 லட்சம் என மொத்தம் ரூ. 20 லட்சம் மீட்கப்பட்டு அவரவா் வங்கி கணக்கில் சோ்க்கப்பட்டது. மேலும் மோசடி நபரின் வங்கிக் கணக்கு மற்றும் செல்லிடப்பேசி எண்ணை வைத்து விசாரணை நடைபெறுகிறது.