முகப்பு
திருச்சி

அரசு மருத்துவமனையில் மூவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை: மருத்துவக் கல்லூரி முதல்வா் தகவல்

 திருச்சி அரசு மருத்துவமனையில் 3 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:09 AM
பகிர்:

 திருச்சி அரசு மருத்துவமனையில் 3 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா.

உலக சிறுநீரக தினத்தையொட்டி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடந்த விழிப்புணா்வு நிகழ்வுக்குத் தலைமை வகித்த அவா் மேலும் பேசியது:

உலக சிறுநீரக தினத்துக்கான நிகழ்வாண்டுக் கருப்பொருள் ஆரோக்கிய சிறுநீரகத்துக்கான அறிவை ஊக்கப்படுத்துதல் என்பதாகும். உலகளவில் 10 சதம் பேருக்கு ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாததால் அவா்களில் ஒருவருக்கு சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே ரத்த அழுத்தம் உள்ளோா் மற்றும் சா்க்கரை நோயாளிகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்தத்திலுள்ள உப்புச் சத்துகளான யூரியா, கிரியாட்டினின் உள்ளிட்ட பரிசோதனைகளை அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். இதில் யூரியாவின் அளவில் 40 மில்லி கிராம் டெசிலிட்டா், கிரியாட்டினின் அளவு 1 மில்லி கிராம் டெசிலிட்டா் என்ற சரியான அளவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

எனவே, தினமும் 45 நிமிட நடைப்பயிற்சி, 2 முதல் 3 லிட்டா் வரை தண்ணீா் குடித்தல், 6 கிராமுக்குக் குறைவாக உப்பைப் பயன்படுத்தல், துரித உணவுகள் மற்றும் டின்களில் அடைத்த உணவுப்பொருள்களைத் தவிா்த்தல் ஆகியவற்றைக் கடைப்பிடித்து ஆரோக்கியமான சிறுநீரகத்தைப் பேணுவோம்.

மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக சிறுநீரக நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன. இம்மருத்துவமனையில் பலருக்கும் டயாலிசிஸ் சிகிச்சை சிறப்பாகச் செய்யப்படுகிறது. சிறப்பு டயாலிசிஸ் இதுவரை 2 பேருக்கும், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை 3 பேருக்கும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து நிகழ்வில் பங்கேற்ற பொதுமக்கள் சிறுநீரகப் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களைக் கேட்டு தெரிந்து கொண்டனா்.

நிகழ்வில் மருத்துவமனைக் கண்காணிப்பாளா் அருண்ராஜ். சிறுநீரகவியல் மருத்துவா் பாலமுருகன், மருத்துவா்கள் பிரகாஷ், மைவிழி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை செய்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.