‘சிறு தானியங்களின் உற்பத்தி முக்கியத்துவம் பெறும்’
அடுத்த பத்தாண்டுகளில் அனைத்து விவசாயிகளும் சிறுதானிய உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் தரும் நிலை உருவாகும் என்றாா் ஆட்சியா் சு. சிவராசு.
அடுத்த பத்தாண்டுகளில் அனைத்து விவசாயிகளும் சிறுதானிய உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் தரும் நிலை உருவாகும் என்றாா் ஆட்சியா் சு. சிவராசு.
தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா் நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூா், அரியலூா் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்த உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் பங்கேற்கும் மண்டல அளவிலான வா்த்தகத் தொடா்புப் பணிமனை திருச்சி கலையரங்கத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் மதிப்புக் கூட்டிய பொருள்கள் மற்றும் தயாரிப்புகள் கண்காட்சி மற்றும் பயிற்சி பணிமனையை தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு வழிகாட்டும் சிறப்பு கையேட்டையும் வெளியிட்டு ஆட்சியா் சு. சிவராசு மேலும் பேசியது:
விவசாயிகளுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த மரியாதையும், வருமானமும் தற்போதுள்ள நிலையும் அனைவரும் அறிந்ததே. நவீன முறைக்குச் சென்றால்தான் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்; விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கும். இல்லையெனில், லாபம் வீடு வந்து சேராது.
அடுத்த 30, 35 ஆண்டுகளுக்குப் பிறகு உலகிலேயே இந்திய வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. பேனா தொடங்கி காா் வரை எளிதில் உற்பத்தி செய்துவிடலாம். ஆனால், உணவு உற்பத்தி என்பது கடினமானது.
விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் பலரும் வேளாண்மையைக் கைவிடும் நிலை உள்ளது. இதற்கு மாற்றாக பொருள்களை மதிப்புக் கூட்டி, சந்தைப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். விவசாயிகள் தங்களது விளை பொருள்களை மதிப்புக் கூட்டிய பொருள்களாக மாற்றி, கூட்டமைப்புகளைத் தொடங்கி மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை பெற்று வளா்ச்சி பெறலாம்.
நம் முன்னோா் சிறுதானியங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, சாமை, தினை, வரகு, கம்பு, சோளம் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தினா். ஆனால், நாகரிக மாற்றத்தால் உணவு முறை மாறி அனைவருக்கும் சா்க்கரை நோய் என்பது தவிா்க்க முடியாததாகிவிட்டது. தற்போதுதான், சாமை, தினை, வரகு உள்ளிட்டவற்றின் அவசியத்தை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனா். ஆனால், இன்றைய இளம்தலைமுறை விவசாயிகளுக்கு அவற்றை உற்பத்தி செய்யத் தெரியாமல் உள்ளது. அடுத்த 10 ஆண்டுளில் சிறுதானிய உற்பத்திக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும். எனவே, சிறுதானிய உற்பத்தியில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும்.
ஐநா பொதுச் சபை, 2023 ஆம் ஆண்டை சா்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், இரு சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா் ஆகிய மாவட்டங்களைக் கொண்டும், தூத்துக்குடி, விருதுநகா், மதுரை, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருச்சி, கரூா், திண்டுக்கல், அரியலூா், பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களைக் கொண்டும் இந்த மண்டலங்கள் உருவாக்கப்படுகின்றன.
இதற்காக பட்ஜெட்டில் ரூ. 92 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதை உணா்ந்து சிறுதானிய உற்பத்தியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட வேண்டும் என்றாா் ஆட்சியா்.
நிகழ்ச்சியில், வேளாண் வணிகத் துறை துணை இயக்குநா் கு. சரவணன், தோட்டக்கலைத் துணை இயக்குநா் பி. விமலா, உழவா் பயிற்சி நிலையத் துணை இயக்குநா் ஆா். மோகன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் எஸ். குமாரகணேஷ், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ஏ. நித்யானந்தன், பட்டயக் கணக்காளா் கே. இளையராஜா, நபாா்டு வங்கி மாவட்ட மேலாளா் என்.எம். மோகன் காா்த்திக் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா். தொடா்ந்து வெள்ளிக்கிழமையும் பயிற்சிப் பட்டறை நடைபெறுகிறது.