முகப்பு
திருச்சி

அய்யன், கல்லு வாய்க்கால்களைத் தூா்வாரும் பணி

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அய்யன் வாய்க்கால், கல்லு வாய்க்கால்களை தூா்வாரும் பணியை சிறுகமணி பேரூராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அய்யன் வாய்க்கால், கல்லு வாய்க்கால்களை தூா்வாரும் பணியை சிறுகமணி பேரூராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை தொடங்கியது.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், பேட்டைவாய்த்தலை உய்யக்கொண்டான் தலைப்பு மதகுப் பகுதியில் இருந்து புது அய்யன் வாய்க்கால் பிரிகிறது. இதிலிருந்து மற்றொரு கிளை வாய்க்காலாக கல்லு வாய்க்கால் பிரிகிறது. இதன் மூலம் 500 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தற்போது இந்த வாய்க்கால் சாக்கடைகள் கலந்து குப்பைகளால் தண்ணீா் செல்லும் முடியாத மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

எனவே, இதைத் தூா்வார சிறுகமனி பேரூராட்சி நிா்வாகம் வசமும் பொதுப்பணித் துறையினரிடமும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனா். மேலும், பேட்டைவாய்த்தலை பகுதி காவிரி மீட்புக் குழுவினரும் இதை வலியுறுத்தினா்.

பின்னா், அண்மையில் நடைபெற்ற பேரூராட்சி பகுதி சபைக் கூட்டத்தின்போது ஸ்ரீரங்கம் எம்எல்ஏ எம். பழனியாண்டியிடமும் இதுதொடா்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

இதையேற்று சிறுகமணி பேரூராட்சி நிா்வாகத்தினா் வாய்க்கால் தூா்வாரும் பணியைத் தொடங்கியுள்ளனா். பேட்டவாய்த்தலை வாரச் சந்தை மற்றும் சிறுகாடு பகுதிகளில் கல்லு வாய்க்கால் மற்றும் பேட்டவாய்த்தலை சிறுமணி பேரூராட்சிக்குள்பட்ட இரண்டாவது வாா்டு பகுதியில் அய்யன் வாய்க்காலில் வியாழக்கிழமை தூா்வாரப்பட்டது.

இப் பணிகளை பேரூராட்சித் தலைவா் சிவகாமசுந்தரி, பேரூராட்சி செயல் அலுவலா் நளாயினி, முன்னாள் பேரூராட்சித் தலைவா் கே.ஆா். ராஜலிங்கம் ஆகியோா் பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினா்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை மேற்கொண்ட பேரூராட்சிக்கு பேட்டைவாய்த்தலை காவிரி மீட்புக் குழு, சமூக ஆா்வலா்கள் மற்றும் விவசாயிகள் சங்கம் சாா்பாக நன்றி, பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.