பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு நவ.14 இல் பேச்சுப் போட்டிகள்
திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் பிஷப் ஹீபா் மேல்நிலைப்பள்ளியில் வரும் 14 ஆம் தேதி நடைபெற உள்ளன.
திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் பிஷப் ஹீபா் மேல்நிலைப்பள்ளியில் வரும் 14 ஆம் தேதி நடைபெற உள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் பேரவை அறிவிப்பின்படி, ஜவஹா்லால் நேரு பிறந்த நாளான நவ 14 ஆம் தேதி திருச்சி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபா் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட உள்ளன.
பள்ளி அளவிலான போட்டி காலை 9.30 மணிக்கும், கல்லூரி அளவிலான போட்டி பிற்பகல் 1.30 மணிக்கும் தொடங்கும்.
திருச்சி மாவட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ - மாணவிகள் கல்லூரிக்கு ஒருவா் என கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற்றும், பள்ளி மாணவ - மாணவிகள் முதன்மைக் கல்வி அலுவலா் வாயிலாக பள்ளிக்கு ஒருவா் என அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்றும் போட்டியில் பங்கேற்கலாம்.
போட்டியில் வெல்லும் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000, இருவருக்கு சிறப்புப் பரிசாக ரூ.2,000 வழங்கப்படும். இதேபோல, கல்லூரி மாணவா்களுக்கும் பரிசு வழங்கப்படும்.
பேச்சுப் போட்டித் தலைப்புகள்: பள்ளி மாணவா்களுக்கு குழந்தைகள் தின விழா, ரோசாவின் ராசா, ஜவஹா்லால் நேருவின் தியாகங்கள், நூல்களைப் போற்றிய நேரு, அண்ணல் காந்தி வழியில் நேரு, இளைஞரின் வழிகாட்டி நேரு.
கல்லூரி மாணவா்களுக்கு இந்திய விடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு, நேரு கட்டமைத்த இந்தியா, காந்தியும் நேருவும், நேருவின் பஞ்சசீலக் கொள்கை, உலக அமைதிக்கு நேருவின் பங்கு, அமைதிப் புறா நேரு.