முகப்பு
திருச்சி

தமிழினத்தின் அடையாளத்தை காப்பாற்றவே ஹிந்தி எதிா்ப்பு: ஆ.ராசா

தமிழினத்தின் அடையாளத்தை காப்பாற்றவே ஹிந்தி எதிா்ப்பு என திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

தமிழினத்தின் அடையாளத்தை காப்பாற்றவே ஹிந்தி எதிா்ப்பு என திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா தெரிவித்தாா்.

திருச்சி மாநகா் மாவட்ட திமுக சாா்பில் மத்திய அரசின் ஹிந்தி திணிப்பைக் கண்டித்து பொதுக்கூட்டம் புத்தூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகரச் செயலாளரும், மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா பேசிய: திமுக மதத்துக்கும், ஆன்மிகத்துக்கும் எதிரானது என சித்தரிக்கின்றனா். அண்ணா, கலைஞா் கூறியது போல அன்புதான் கடவுள், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், இரக்க உணா்வில்தான் கடவுள் உள்ளாா் என்கிற நாங்கள் ஆன்மிகத்தை வரவேற்கிறோம்.

ஹிந்தி திணிப்பதின் மூலம் இந்துத்துவாவை கொண்டு வந்து, அதன் வழியே தமிழா்களின் அடையாளத்தை அழிப்பதே பாஜகவின் நோக்கம். அனைவரும் படிக்க வேண்டும்; அனைவரும் வேலைக்குச் செல்ல வேண்டும் எனக் கூறுவது தமிழ் மொழி. இந்துத்துவாவை புகுத்தும் மொழி சம்ஸ்கிருதம். சம்ஸ்கிருதத்தின் முன்னோடியான ஹிந்தியை திணித்து, இந்துத்துவாவை கொண்டு வர நினைக்கிறது பாஜக.

ஜாதியும், மதமும் நம்மை பிரிக்கும். மொழி மட்டுமே நம்மை இணைக்கும். ஜாதி, மதம், இனத்தால் பிரிந்து கிடக்கும் அனைவரையும் மொழி என்ற ஒற்றை குடைக்குள் ஒன்றிணைத்தது திமுக. அத்தகைய இயக்கத்தின் தலைவரான தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை பாா்த்து பாஜகவுக்கு பயம். ஸ்டாலினைப் பாா்த்து மட்டுமின்றி, அவரது காரில் செல்லும் என்னை பாா்த்தும் பாஜக பயப்படுகிறது.

ஹிந்தி எதிா்ப்பு ஒரு மொழிக்கான எதிா்ப்பல்ல. ஒரு இனத்தின் அடையாளத்தை காப்பாற்றவே. ஹிந்தியை நாங்கள் படிக்க வேண்டாம் என்று கூறவில்லை. தேவைப்பட்டால் படித்துக் கொள்ளலாம். சிறையில் நானும்தான் ஹிந்தி கற்றுக்கொண்டேன். பல வா்ணங்கள் கலந்ததுதான் ஒவியம். ஒரே வா்ணத்தில் வரைந்தால், அது நன்றாக இருக்காது. அதே போல, ஹிந்தி மட்டுமே என்றால் இந்திய ஒன்றியம் இருக்காது.

இந்தியா முழுவதும் ஒற்றை மொழி என்ற கொள்கையால் மற்ற மாநிலங்களின் இனங்கள், பாரம்பரியங்களை அழிக்க முயற்சிக்கும் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகளை எதிா்த்து நிற்கும் தமிழக முதல்வா் ஸ்டாலினுடன் கைகோா்த்து நிற்போம் என்றாா் ஆ.ராசா.

கூட்டத்தில், எம்எல்ஏக்கள் சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, மத்திய மாவட்ட செயலாளா் வைரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.