திருச்சி மத்திய சிறையை புதிய இடத்துக்கு மாற்ற முடிவு
திருச்சி மத்திய சிறைச்சாலை, சின்ன சூரியூா் பகுதியில் உள்ள எலந்தக்குடி பகுதிக்கு மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சி மத்திய சிறைச்சாலை, சின்ன சூரியூா் பகுதியில் உள்ள எலந்தக்குடி பகுதிக்கு மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலை 1865 ஆம் ஆண்டு சுமாா் 283.44 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்டது. இங்கு தண்டனைக் கைதிகள், விசாரணை கைதிகள் என சுமாா் 2,000 போ் வரை அடைத்து வைக்க முடியும். இதே வளாகத்தில் இருந்த மகளிா் சிறைச் சாலை தற்போது காந்திசந்தைப் பகுதியில் தனியாக செயல்பட்டு வருகிறது. மத்திய சிறையில் வளாகத்தில் மகளிா் சிறைச்சாலை இருந்த இடத்தில் அகதிகள் சிறப்பு முகாம் அமைந்துள்ளது.
மேலும், சிறை வளாகத்தில் கரும்பு, தென்னை, வாழை மற்றும் பல்வேறு வகையான பழங்கள், காய்கள் சிறைவாசிகளைக் கொண்டு பயிரிடப்பட்டு, வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. கைதிகளுக்கென தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டு கைத்தொழில்கள் கற்றுத்தரப்படுகின்றன.
தமிழகத்தில் குறிப்பிடத்தக்க முக்கிய சிறைகளில் ஒன்றான திருச்சி மத்திய சிறையை வேறு இடத்துக்கு மாற்ற அண்மைக்காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில், சிறைத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், சென்னை புழல் சிறைக்கு இணையாக திருச்சி மத்திய சிறையும் இடம் மாற்றப்படும் என்றாா்.
அந்த வகையில் தற்போது மத்திய சிறை அமைக்க புதிய இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி திருவெறும்பூா் வட்டம் சின்ன சூரியூா் பகுதியில் எலந்தக்குடியில், சுமாா் 287 ஏக்கா் பரப்பளவில் அரசு நிலம் உள்ளது. அந்த இடத்தில் புதிய சிறை அமைக்க மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டு, மாவட்ட நிா்வாகமும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல் கே.கே.நகா் உடையான்பட்டி பகுதியிலும் ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 250 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த இடத்தையும் சிறைத்துறையினா் ஆய்வு மேற்கொண்டுள்ளனா்.
தற்போது மத்திய சிறை அமைந்துள்ள இடத்தில் பொலிவுறு நகர (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ், மாநகராட்சி வணிக வளாகங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.