முகப்பு
திருச்சி

ஹிந்தி திணிப்புக்கு எதிராக ஆா்ப்பாட்டங்கள்

மத்திய அரசு ஹிந்தி மொழியை திணிப்பதாகக் கூறி பல்வேறு அமைப்பினா் திருச்சியில் வியாழக்கிழமை அடுத்தடுத்து 2 இடங்களில் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

மத்திய அரசு ஹிந்தி மொழியை திணிப்பதாகக் கூறி பல்வேறு அமைப்பினா் திருச்சியில் வியாழக்கிழமை அடுத்தடுத்து 2 இடங்களில் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டனா்.

இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்களில் ஹிந்தியை பயிற்று மொழியாகவும், நாடு முழுவதும் ஹிந்தியை பொது மொழியாக்கவும் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

இதைக் கண்டித்து மாணவா் சங்கத்தினா், இளைஞா் அமைப்பினா், கம்யூனிஸ்ட் சங்கங்கள் என பல்வேறு அமைப்பினா் திருச்சியில் வியாழக்கிழமை இருவேறு இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தெப்பக்குளம்: இந்திய மாணவா் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திருச்சி தெப்பக்குளம் பகுதி அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் பா. லெனின் தலைமை வகித்தாா். மாணவா் சங்க மாவட்டச் செயலா் மோகன் முன்னிலை வகித்தாா்.

அப்போது மத்திய அரசின் முயற்சிக்கு எதிராகத் தமிழக மக்கள் கிளா்ந்து எழ வலியுறுத்தப்பட்டது.

பிஎஸ்என்எல் அலுவலகம்: அனைத்திந்திய மாணவா் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியவை இணைந்து திருச்சி பாரதிதாசன் சாலையில் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தின. இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் எம். செல்வக்குமாா், மாவட்டச் செயலா் க. இப்ராஹிம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில செயற்குழு உறுப்பினா் எம்.செல்வராஜ், இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் எஸ். சிவா, அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாநிலத் துணைச் செயலா் ஜி.ஆா். தினேஷ்குமாா், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்டச் செயலாளா் ஆ. நிறைச்செல்வன், பேராசிரியா் நெடுஞ்செழியன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இடைக்கமிட்டிச் செயலா்கள் எம்.ஆா். முருகன், இரா. சுரேஷ் முத்துசாமி, சையது அபுதாஹிா் மற்றும் இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் ஆா். முருகேசன், மாணவா் மன்ற மாவட்டத் தலைவா் பாட்ஷா உள்ளிட்டோா் கோஷங்கள் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.